தமிழ்நாட்டில் கடும் குளிர் நிலவ இதுதான் காரணம்.. வானிலை அப்டேட்
சென்னை உள்ளிட்ட வடதமிழக பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பின் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரிக்கும் கீழ் குறைந்ததால் கடும் குளிர் நிலவியதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “உதகை, குன்னூர், ஏற்காடு, கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட மலைப் பிரதேச பகுதிகளில் 10 டிகிரிக்கும் கீழ் குறைந்தபட்ச வெப்ப நிலை பதிவானதாக பதிவிட்டுள்ளார்.
அதேநேரம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட வடதமிழக பகுதிகளில் 17 டிகிரிக்கும் கீழ் தட்பவெட்ப நிலை நிலவியதாக பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கும்மிடிப்பூண்டி, புதுச்சேரி, கடலூர். காரைக்கால், நாகை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 21 டிகிரிக்கு குறைவாக வெப்ப நிலை நிலவியதாக கூறியுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை நீண்ட நாட்களுக்கு பின் 21 டிகிரிக்கும் கீழாக குறைந்தபட்ச வெப்ப நிலை நிலவியதாகவும் இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலை நேரத்தில் பனி மூட்டம் அல்லது மூடுபனி காண முடிவதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.