வீட்டு பணிப் பெண்ணை ஏமாற்றியதாக இந்தி நடிகர் கைது
திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக வீட்டு பணிப் பெண் அளித்த புகாரை அடுத்து, இந்தி நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ள நதீம் கான், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்திலும் நடித்துள்ளார். பல்வேறு நடிகர்களின் வீட்டில் பணிபுரியும் 41 வயது பெண்ணுடன் நதீம் கானுக்கு 2015-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. தொழில்முறையில் முதலில் அவர்கள் பழகினர். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக நதீம் கான் உறுதியளித்ததை அடுத்து நெருங்கி பழகினர்.
இந்நிலையில் கடந்த 10 வருடமாகத் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திவிட்டு, தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக நடிகர் நதீம் கான் மீது, அப்பெண் மும்பை மால்வானி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பாலிவுட்டில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.