‘காந்தாரா: சாப்டர் 1’ வெற்றியில் மக்களுக்கும் பங்கு: ரிஷப் ஷெட்டி பேட்டி

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் வெற்றியில் மக்களுக்கும் பங்கு இருப்பதாக ரிஷப் ஷெட்டி பேட்டியளித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இந்தியளவில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுவரை 700 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்த வெற்றியை முன்னிட்டு காசிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ரிஷப் ஷெட்டி. அதனைத் தொடர்ந்து தனி விமானத்தில் மதுரை வந்திறங்கி ராமேஸ்வரத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, “காசிக்கு போனால் ராமேஸ்வரத்துக்கு வந்து தானே ஆக வேண்டும். ’காந்தாரா: சாப்டர் 1’ படமே ஈஸ்வரனுடைய கிணற்றைப் பற்றியும், நமது தெய்வத்தையும் பற்றி தான் எடுத்தேன். படமும் வெளியாகி, மக்களும் பெரிய வெற்றியைக் கொடுத்தார்கள். இவ்வளவு பெரிய வெற்றியில் மக்களும் பங்கு இருக்கிறது. படத்தை நல்லபடியாக முடித்து மக்களிடையே கொண்டு போவது வரை ஒரு ஆசீர்வாதம் இருந்தது. அதனால் தான் ராமேஸ்வரம் வரை வந்திருக்கிறேன். நல்ல தரிசனம் கிடைத்தது. சந்தோஷமாக இருக்கிறது.
தமிழகத்தில் ’காந்தாரா: சாப்டர் 1’ டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றி மக்களுக்கு தான் செல்ல வேண்டும். இங்கு விளம்பரப்படுத்த வரவேண்டிய சமயத்தில் தான், சில விஷயங்களால் வரமுடியாமல் போய்விட்டது. நிறைய நண்பர்கள் இங்கிருந்து அழைத்துப் பேசினார்கள். திரையரங்குகளில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று சொன்னார்கள். இணையத்தில் நிறைய விமர்சனங்களும் படித்தேன். அடுத்த படத்தில் இன்னும் முயற்சிகளை போட்டு மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.