குறைவான தியேட்டர் வசூல்; ஒ.டி.டி தளத்தில் வரவேற்பை பெறுமா? வார் 2 ஸ்ட்ரீமிங் அப்டேட்!

குறைவான தியேட்டர் வசூல்; ஒ.டி.டி தளத்தில் வரவேற்பை பெறுமா? வார் 2 ஸ்ட்ரீமிங் அப்டேட்!

இந்தி சினிமாவில், யுனிவர்ஸ் படங்களின் வரிசையில், யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் 'ஸ்பை யுனிவர்ஸ்'  திரைப்படத்தின் ஒரு பகுதியாக, அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவான 'வார் 2' திரைப்படம், பெரும் கடந்த ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தில், பிரபல தெலுங்கு நடிகர், ஜூனியர் என்.டி.ஆர் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது வார் 2 திரைப்படம், ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், தளத்தில், அக்டோபர் 9 முதல் (இன்று) தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தை ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.

இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட பதிவில், "இரட்டிப்பான கோபம். இரட்டிப்பான அழிவு. போருக்குத் தயாரா? வார் 2 திரைப்படத்தை அக்டோபர் 9 முதல் நெட்ஃபிளிக்ஸில் பாருங்கள்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை உருவாக்கியது. சிலர் சிரிப்பு ஈமோஜிகளுடன் கருத்துத் தெரிவிக்க, மற்றவர்கள் இப்படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, நடிகர் ஹிருத்திக் ரோஷன் இன்ஸ்டாகிராமில் இப்படத்தில் அவர் ஏற்று நடித்த கபீர் கேரக்டரின் படங்களை பகிர்ந்து, "எல்லாமே சரியாகத் தோன்றியது. இது நடப்பதற்காகவே படைக்கப்பட்டது போல. வெற்றி நிச்சயம். கவலைகள் இல்லை, நான் என் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். நிச்சயமாக நான் அதைச் செய்தேன். ஆனால், அந்த உறுதிக்குப் பின்னால் ஏதோ ஒன்று ஒளிந்திருந்தது.

நான் மீண்டும் மீண்டும் நிறுத்திய ஒரு குரல்... 'இது மிகவும் எளிதானது... எனக்கு இது நன்றாகத் தெரியும்.' என்று அது கூறியது. 'ஒவ்வொரு படமும் துன்புறுத்தலாகவும், அதிர்ச்சியாகவும் இருக்க வேண்டியதில்லை; அந்தக் கணத்தின் உண்மைக்காக இடைவிடாத தேடலாக இருக்க வேண்டியதில்லை. இதற்கு நான் தகுதியானவன்,' என்று சொன்ன மற்றொரு குரலும் இருந்தது என்று பதிவிட்டிருந்தார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'வார்' படத்தின் தொடர்ச்சி தான் இந்த 'வார் 2' திரைப்படம்,. முதல் பாகத்தில், ஹிருத்திக் ரோஷன் கபீர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார், அவருடன் டைகர் ஷெராஃப் நடித்திருந்தார். 'வார் 2'-இல், ஹிருத்திக் ரோஷன் தன் கபீர் கேரக்டரில் மீண்டும் நடித்திருந்த நிலையில், இவருடன் ஜூனியர் என்.டி.ஆர் விக்ரம் ஆகவும், கியாரா அத்வானி காவ்யா ஆகவும் இந்த ஸ்பை யுனிவர்ஸில் இணைந்தனர். 'வார் 2' திரைப்படம் உலக அளவில் ரூ. 364.25 கோடி வசூல் செய்தது. இது, 'வார்' படத்தின் மொத்த வசூலான ரூ. 471 கோடியை விடக் குறைவுதான்.