சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு ஏன்? ஆஸ்திரேலிய பிரதமர் கருத்து

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு ஏன்? ஆஸ்திரேலிய பிரதமர் கருத்து

சிட்னி போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை - மகன் இருவரும் மதரீதியான சித்தாந்தத்தால் தூண்டப்பட்டிருக்கலாம் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வாழ்கிற யூதர்களை அச்சுறுத்துவதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தந்தை - மகன் இருவரும் ‘வெறுப்பின் சிந்தாந்தத்தை’ தீவிரமாக ஏற்றுக்கொண்டவர்கள் என்று அல்பானீஸ் முதலில் தெரிவித்தார். பின்னர், “இது மதரீதியான சித்தாந்தத்தால் ஏவப்பட்டதாக தெரிகிறது” என்று கூறினார். இது குறித்து பேசிய அவர், “ஐஎஸ்ஐஎஸ்ஸின் எழுச்சியையும், தீவிரவாதத்தையும் வெறுப்பு சித்தாந்தத்தையும் எதிர்த்து உலகமே போராடி வருகிறது.

கட்டடத் தொழிலாளியான நவீத் அக்ரம், வேலையில்லாமல் இருந்துள்ளார். 2019 ஆம் ஆண்டே அவர் உளவுத் துறையின் கண்காணிப்பில் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதே அவரை விசாரித்திருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னதாக அவர்கள் இருவருடைய நடமாட்டங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்” என்று அல்பானீஸ் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று சிட்னி நகரில் அமைந்துள்ளது போண்டி கடற்கரை. விடுமுறை நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.14) யூதர்களின் பாரம்பரிய பண்டிகையான ‘ஹனுக்கா’ பண்டிகையையொட்டி அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். கொண்டாட்டத்தின் போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த 2 பேர் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பீதியடைந்த மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர்.

இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கிட்டத்தட்ட 50 வயதான ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு இளைஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த சஜித் அக்ரம் (50) மற்றும் நவீத் அக்ரம் (24) என்பதும், இவர்கள் இருவரும் தந்தை - மகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் சம்பவ இடத்தை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டது. அதில், தாக்குதலில் ஈடுபட்ட தந்தை - மகன் இருவருக்கும் ஆஸ்திரேலியாவுடன் நீண்டகால தொடர்பு இருப்பதும், சஜித் அக்ரம் 2015ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி உரிமம் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்னதாக நவீத் தனது தாயாரிடம் மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் ஒரு வாடகை குடியிருப்பில் பதுங்கி தனது தந்தையுடன் சேர்ந்து தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட நவீத் அக்ரம் தற்போது கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.