“எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி தவறு செய்துவிட வேண்டாம்..” அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

“எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி தவறு செய்துவிட வேண்டாம்..” அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
கடந்தாண்டை போன்று மீண்டும் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி தவறு செய்துவிட வேண்டாம் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, கடந்தாண்டு ஜுன் மாதத்தில் செய்த அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள் என்பது தான் அமெரிக்காவுக்கு ஈரான் கூறும் செய்தி என எச்சரித்துள்ளார்.
தோல்வியடைந்த முயற்சியை மீண்டும் செய்தால் தோல்வி தான் மீண்டும் கிடைக்கும் என்பது அமெரிக்காவுக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜூன் மாதம் நடந்த தாக்குதலில் அணு ஆலை கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன, இயந்திரங்கள் சேதமடைந்தன ஆனால் தொழில்நுட்பத்தையும், மன உறுதியையும் வெடிகுண்டு வீசி தகர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஈரான் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருப்பதாக தெரிவித்துள்ள அரக்சி, அமெரிக்கா பேச்சுவார்த்தையை விரும்புவதில்லை எப்போதும் போரையே தேர்வு செய்கிறது எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.