பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: ஆட்களை அழைத்து வரும் விவகாரத்தில் பாஜக நிர்வாகிகளிடையே மோதல்

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: ஆட்களை அழைத்து வரும் விவகாரத்தில் பாஜக நிர்வாகிகளிடையே மோதல்

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாநாட்டிற்கு ஆட்களை அழைத்து வருவதற்கு வழங்கப்பட்ட பண விவகாரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட தெற்கு மாவட்ட தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்திருக்கின்றன.

இந்நிலையில், தேர்தல் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கவும், கட்சித் தொண்டர்களுடன் உரையாடவும் பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தருகிறார். இன்று மாலை 3 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தொண்டர்களை அழைத்துவர, கட்சி மேலிடம் சார்பில் ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பணத்தைப் பகிர்ந்து கொள்வதில் மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சினை முற்றிய நிலையில், நேற்று காலை (ஜன 22) தர்மராஜின் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் தென்னரசு ஆகியோர் தனது வீட்டிற்கு ஆட்களை அனுப்பி வாகனங்களை அடித்து உடைத்து தனது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மாவட்டத் தலைவர் தர்மராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் தென்னரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், ஆளும் தரப்பிற்குப் போட்டியாகப் பலத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பொது இடத்திலேயே மோதிக்கொள்வது அக்கட்சியின் மேலிடத்தைச் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை மாநில தலைமை எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.