நெல்லையில் 2.33 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட நிர்வாகம் விளக்கம்
கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என நெல்லையில் 2 லட்சத்திற்கு அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், நவம்பர் 4 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 ஆம் தேதிக்கு எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரித்திருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, தற்போது வரை வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட தீவிர திருத்த படிவங்கள் தொடர்பாகவும், SIR-ல் எழுந்து வரும் சந்தேகங்கள் தொடர்பாகவும் அரசியல் கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பதிலளித்தனர்.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 2,33,464 வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் 57,567 பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில், மொத்தம் உள்ள வாக்காளர்களில் 19.29 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதியில் 47,598 நபர்களும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 46,461 நபர்களும், பேட்டை தொகுதியில் 36,213 நபர்களும், ராதாபுரம் தொகுதியில் 45,625 நபர்கள் என 16.46% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 13 லட்சத்து 89 ஆயிரத்து 708 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்கள் பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.