பசியால் துடித்த 3 மாத குழந்தை; தாய்ப்பாலுக்கு உதவிய பெண் ஆய்வாளர்
சென்னையில் தாய் எஸ்.ஐ தேர்வு எழுதிய நிலையில் பசியில் துடித்த 3 மாதக் குழந்தை தாய்ப்பால் அருந்த காவல் பெண் ஆய்வாளர் உதவி செய்த சம்பவம் சக தேர்வர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மாநிலம் முழுவதும் சுமார் 1.78 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான அறிவிப்பு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் மட்டும் உடல் உறுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
தேர்வை எழுத தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய இணைய தளத்தில் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. மொத்தம் 1,78,391 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. சென்னையில் மட்டும் 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வில் முறைகேட்டை தடுக்க விண்ணப்பதாரர்களின் இடது கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. இதற்காக தேர்வாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் போதே அவர்களது இடது கை விரல் ரேகை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
காலை 10 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை முதன்மை தேர்வும், பிற்பகல் 3.30 மணியில் இருந்து 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற்றது. தேர்வு எழுதுபவர்கள், காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர வேண்டும். தேர்வு கூடத்துக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், கடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்தவகையில் சென்னை ஓ.எம்.ஆர் சாலை, செம்மஞ்சேரி மையத்தில் மூன்று மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்த ஒரு பெண் தன்னுடைய குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுத சென்றார். காலை 8.30 மணி அளவில் தேர்வு எழுத சென்ற பெண் மாலை வரை தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை இருந்ததால் அவருடைய மூன்று மாத குழந்தை பசியால் தாய்ப்பாலுக்கு ஏங்கி பல மணி நேரம் அழுது கொண்டே இருந்தது.
இதை கண்டு அங்கு பணியில் இருந்த காவல் பெண் ஆய்வாளர் சித்ரா அந்த குழந்தை மற்றும் தந்தையை பணியில் இருந்த காவல்துறை ஆணையர் கார்த்திகேயனிடம் அழைத்துச் சென்று விபரத்தை எடுத்துக் கூறினார். தேர்வு முடிந்து வெளியில் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் உதவி ஆணையர் வெங்கடேசனின் வாகனத்தில் குழந்தையை தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று தேர்வு எழுதிக்கொண்டு இருந்த பெண் தாய்ப்பால் அளிக்கும் வகையில் உதவி செய்தனர். போலீசார் செய்த செயலை கண்டு தேர்வு எழுத வந்த நபர்கள் காவல்துறைக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்கள்.