வழி தெரியாமல் நின்ற போது எனக்கு வழிகாட்டியவர் விஜய்: மேடையில் கலங்கிய செங்கோட்டையன்
ழி தெரியாமல் நின்ற போது தனக்கு வழி காட்டியவர் தவெக தலைவர் விஜய் என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தனியார் மினி மஹாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் நிர்வாகிகளிடம் பேசியதாவது,
நேற்று இரவு தான் கூட்டம் நடைபெற உள்ளதாக நிர்வாகிகளிடம் கூறினேன். இந்த கூட்டத்தை கூட்ட அதிமுகவில் ஒரு வாரம் ஆகும். அதற்கும் என்ன என்ன மந்திரம் பண்ண வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். ஆனால் தளபதியை தலைமை ஏற்று தவெக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க நீங்கள் ஆர்ப்பரித்து வந்துள்ளதை கண்டு உண்மையிலேயே வியப்படைந்துள்ளேன்.
புரட்சி தலைவர் மறைவிற்கு பிறகு, புரட்சி தலைவி அம்மாவிடம் அரசியல் புனித பயணத்தை மேற்கொண்டேன். எடப்பாடி கழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று நான் கூறிய பிறகு தான் அவர்களின் படங்களை ஸ்டாம்ப் சைஸ் அளவில் போட்டனர்.
தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என இயேசு பிரான் சொன்னார். இறைவனிடம் கையேந்துங்கள், அவர் இல்லை என்று சொல்லமாட்டார் என சொன்னார்கள். இந்து மதத்தில் கேட்பதை கொடுப்பவர் கிருஷ்ணர். ஆனால், கேட்காமலே கொடுப்பவர்தான் நம்முடைய தளபதி. தமிழ்நாட்டுக்கு தற்போது வெற்றி தளபதி கிடைத்துள்ளார்.
கண் கலங்கிய செங்கோட்டையன்
என் உடம்பில் ஓடுகிற ஒவ்வொரு துளி ரத்தமும் இனி விஜய்க்காக மட்டும் தான் இயங்கும் (அப்போது செங்கோட்டையன் கண் கலங்கினார் ). வழி தெரியாமல் நின்ற போது எனக்கு வழி காட்டியாக விஜய் இருந்தார். புரட்சி தலைவி அம்மாவிற்கு பிறகு நான் ஒருவரை அடையாளம் காட்டினேன். அந்த அடையாளம் காட்டியவர் தான் இறுதியில் என்னை அடையாளம் காட்டி விட்டு சென்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் வரும் போது காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வருகிறது. மெகா கூட்டணி அமைய போகிறது என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் ஒரு கூட்டணியும் வரவில்லை. அதிமுகவிற்கு 84 இடங்களில் 3 ஆம் இடமும், சில இடங்களில் டெபாசிட்டும் பறிபோனது. இதை எல்லாம் அவரிடம் கேட்டோம்.
ஒரு நாள் பொய் சொல்லி ஒருவனை ஏமாற்றலாம், ஆனால் பல நாள் பொய் சொல்லி ஒருவனை ஏமாற்ற முடியாது, அதற்கு பிறகு நாமக்கல் பிரச்சார கூட்டத்திற்கு வந்த இபிஎஸ், பெரிய கூட்டணி நம்முடன் வரப் போகிறது. கொடி அசைத்து கொண்டுள்ளார்கள் பாருங்கள், பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள் என சொன்னார்.
ஆனால் பிள்ளையார் சுழி போட்டதே உங்களை முடிக்க தான் கவலைப்படாதீர்கள். தமிழகத்தில் விஜயை முதல்வராக ஏற்று கொண்டு யார் வேணாலும் கூட்டணிக்கு வரலாம். ஆனால் விஜயை தாண்டி யாராலும் முதலமைச்சர் என்ற கனவை கூட காண முடியாது" என்றார்.