சிபிஐ அதிகாரிகளிடம் கலங்கிய விஜய்! ‘அந்த’ கேள்வியை கேட்டதும் உடைந்த மனது! வெளியான தகவல்!
கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஜனவரி 12 ஆம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டார். இந்த விசாரணை சுமார் ஏழு மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணை முழுவதும், சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியதாகவும், அதற்கு அவர் பொறுமையாக பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, விஜய் நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். காலை 10.30 மணியளவில் அவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
முதலில் பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, விஜய்யின் கைப்பை சோதனையிடப்பட்டது. அதில், விசாரணைக்காக தயாரித்துக் கொண்டு வந்த சில குறிப்பு தாள்களும், சில பிஸ்கட் பாக்கெட்டுகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
கரூர் நெரிசல் வழக்கு
விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோரும் சென்றிருந்தனர். இதில், நிர்மல் குமார் வழக்கறிஞர் என்பதால், விசாரணை நடைபெறும் பகுதிக்கு அருகிலுள்ள அறையில் இருக்க அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஆதவ் அர்ஜூனா வரவேற்பறையில் அமர வைக்கப்பட்டார். விஜய்யிடம் விசாரணை நடைபெற்ற அறைக்கு பக்கத்தில் நிர்மல் குமார் அமர்ந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை தொடங்கியதும், சிபிஐ அதிகாரிகள் தங்களுக்கே உரிய பாணியில், அமைதியாகவும் அதே நேரத்தில் கூர்மையாகவும் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
விஜய் சிபிஐ விசாரணை
விஜய்யிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில்கள் உடனுக்குடன் கணினியில் டைப் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பல கேள்விகளுக்கு அவர் ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளார். சில கேள்விகளுக்கு தமிழிலும் விளக்கம் அளித்துள்ளார். கரூர் கூட்டத்துக்கு எப்போது அனுமதி பெறப்பட்டது, அந்த நாளில் அவர் எத்தனை மணிக்கு கரூர் சென்றார், போலீசார் எந்த நேரத்தில் வருமாறு அறிவுறுத்தினர், எவ்வளவு நேரம் அவர் மேடையில் பேசினார், பேசிக்கொண்டிருக்கும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்ததா என்பதுபோன்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டன.
விஜய் பதில்
அதோடு, கூட்டத்துக்கு வந்தவர்கள் உயிரிழந்தது குறித்து எப்போது தகவல் கிடைத்தது, சம்பவத்துக்குப் பிறகு அவர் ஏன் கரூரிலேயே தங்கவில்லை, இடையில் ஒரு மணி நேரம் எங்கு இருந்தார், யாருடன் பேசினார் என்பன போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், திருச்சி கூட்டத்துக்குப் பிறகு பெரம்பலூருக்கு செல்லும் போது நெரிசல் ஏற்படும் என போலீசார் எச்சரித்ததால் அங்கு செல்லவில்லை என்றும், அதேபோல் கரூரிலும் நெரிசல் ஏற்படும் என முன்கூட்டியே போலீசார் கூறியிருந்தால், தானும் அங்கு சென்றிருக்க மாட்டேன் என்றும் விஜய் பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிபிஐ அதிகாரிகள்
மேலும், வேலுசாமிபுரத்துக்கு முன்பாக பேருந்தை நிறுத்துமாறு போலீசார் கூறியதாகவும், ஆனால் ஆதவ் அர்ஜூனா பேருந்தை உள்ளே கொண்டு செல்லச் சொன்னதாகவும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, அது தனக்கு தெரியாது என விஜய் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் சில வீடியோ காட்சிகளையும் விஜய்க்கு காண்பித்து, அதனடிப்படையில் கூடுதல் விளக்கங்களையும் கேட்டுள்ளனர். அதேபோல், பிரசார பேருந்தில் லைட் ஆனும் ஆஃப் ஆனதும் தொடர்பான கேள்விக்கு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்படி நடந்ததாக விஜய் பதிலளித்துள்ளார்.
விஜய் கண்ணீர்
இதற்கு முன்பு தவெக நிர்வாகிகள் மற்றும் பேருந்து ஓட்டுநரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும், அவர்கள் அளித்த பதில்களையும் ஒப்பிட்டு பார்த்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த முழு விசாரணை காலத்திலும் விஜய் எந்த பதற்றமும் காட்டாமல், நிதானமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. விசாரணையின் ஒரு கட்டத்தில், கரூரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த செய்தியை அறிந்தபோது அவர் எந்த மனநிலையில் இருந்தார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது விஜய் கண்கலங்கியபடியே சில பதில்களை அளித்ததாகவும், அதை கவனித்த சிபிஐ அதிகாரிகள் அவரை சிறிது நேரம் தேற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு தயார்
விசாரணை நடைபெறும் போது மதிய உணவை ஆர்டர் செய்யலாம் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் விஜய் உணவு வேண்டாம் என மறுத்துவிட்டு, தன் பையில் வைத்திருந்த பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்துச் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த எளிமையான நடத்தை அதிகாரிகளிடமும் கவனம் பெற்றதாகவும், சில அதிகாரிகள் அவரது எளிமையை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. மாலை 6.30 மணியளவில் விசாரணை முடிவடைந்தது. அப்போது மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு, எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர தயாராக இருப்பதாக விஜய் உறுதியாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.