காசா அமைதித் திட்டத்திற்கான அமெரிக்காவின் வரைவு தீர்மானம் - ஐ.நா சபை ஒப்புதல்
காசா அமைதித் திட்டத்தை வலுப்படுத்த அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள வரைவு தீர்மானத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே கடுமையான போர் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போரை முடித்துக்கொள்ள பல உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், காஸாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் அமைதியை கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், ஒரு வழியாக கடந்த அக்டோபர் 10ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், ஐநாவின் 193 உறுப்பு நாடுகளில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த கோரிக்கையை அங்கீகரித்திருக்கின்றன.
இந்நிலையில்தான் பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைப்படுத்த அமெரிக்கா ஒரு அமைதி வாரியத்தை நியமித்து, ஒரு வரைவு தீர்மானத்தை ஏற்படுத்தியது. இதில் பலகட்ட மாறுதல்கள் செய்யப்பட்ட நிலையில், ஐ.நாவின் ‘உலகம் முழுவதும் மேலும் அமைதிக்கு’ என்ற பெயரில் இந்த தீர்மானம் குறித்து டிரம்ப் உரையாற்றினார். அதற்கு ஆதரவாக 13 வாக்குகள் கிடைத்த நிலையில், சீனாவும், ரஷ்யாவும் மட்டும் வாக்களிக்கவில்லை. அதே சமயம் அவ்விரு நாடுகளும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
வாக்கெடுப்புக்கு பிறகு பேசிய ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ், “இந்த தீர்மானம் காசாவை வளப்படுத்தவும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உதவும்” என்றார். ஆனால் காசாவின் அனைத்து நிர்வாக பொறுப்புகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ள ஹமாஸ், இந்த தீர்மானம் பாலஸ்தீனியர்களின் கோரிக்கைகையும், உரிமைகளையும் கருத்தில்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற கடும்போரின் விளைவாக காசாவின் பெரும்பாலான பகுதிகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதி திட்டத்தின் மூலம் இஸ்ரேல், எகிப்து மற்றும் புதிதாக பயிற்சி பெற்ற பாலஸ்தீன காவல்துறை ஆகிய மூன்றும் இணைந்து எல்லை பகுதிகளை பாதுகாக்க உள்ளது. அதேநேரம் காசா பகுதியை ராணுவமயமாக்கி ஒரு சர்வதேச நிலைப்படுத்தல் படையை (ISF) அங்கு உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசு சாரா ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை நிரந்தரமாக பறிமுதல் செய்தல், பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் மனிதாபிமான சேவைகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் ISF பணியாற்றவிருக்கிறது.
பாலஸ்தீனத்துக்கு அரசுரிமை
காசாவிற்கான இடைக்கால நிர்வாக குழுவாக ‘அமைதி வாரியம்’ செயல்படும் என்றும், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் தலைவராக டிரம்ப் செயல்படுவார் என்றும் ஐ.நாவில் ஆற்றிய அமெரிக்க உரையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, பாலஸ்தீன ஆணையம் கோரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டதும், காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் பணி தொடங்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதனை இஸ்ரேல் நிராகரித்திருக்கிறது.
காசாவில் அமைதியை நிலைநாட்ட கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்தால் கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜோர்டான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆகிய அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்றிருக்கிறது.