வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மஸ்கின் 'X' சாட்

வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மஸ்கின் 'X' சாட்

கடும் போட்டிகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் 'X' சாட் எனும் புதிய மெசஞ்சர் சேவையை எலான் மஸ்கின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

போட்டினா நமக்கு ‘அல்வா சாப்டுறது மாதிரி’ என்பது போன்ற அசாத்திய நடவடிக்கைகளை தான் டெக் சந்தையில் தொடர்ச்சியாக எலான் மஸ்க் எடுத்து வருகிறார். உலகின் ‘நம்பர் 1’ பணக்காரரான மஸ்க், ‘எதில் கால் வைத்தாலும் அதை சாத்தியப்படுத்தி சாதனை படைத்து விட வேண்டும்’ என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் விடாபிடியாக, மதிப்பை விட பன்மடங்கு பணம் கொடுத்து, ட்விட்டரை தன் வசமாக்கினார். அதன் பின்னர் அதற்கு எக்ஸ் என்று பெயர் சூட்டி பல அம்சங்களை அறிமுகம் செய்த மஸ்க், அதற்கு புத்துயிர் அளிக்க கட்டண சேவைகளையும் கொண்டு வந்தார்.

அந்தவகையில், தற்போது புதிய மெசஞ்சர் சேவையை அறிமுகம் செய்து வைத்துள்ளார். 'X' சாட் என்று குறிப்பிடப்படும் இந்த சேவை பழைய ‘நேரடி மெசேஜ்’ (Direct Message) சேவையை அப்புறப்படுத்தியுள்ளது. முதற்படியாக, ஐஓஎஸ் உடன் வரும் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் கணினியில் பயன்படுத்தும் எக்ஸ் தளங்களுக்கு மட்டும் இந்த சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முற்றிலும், பாதுகாப்பை மட்டுமே குறிக்கோளாக வைத்து 'X' சாட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, மெசஞ்சர் சந்தையில் முதன்மை பட்டியலில் இருக்கும் வாட்ஸ்ஆப், இந்தியாவின் ‘அரட்டை’ போன்ற செயலிகள் வழங்கும் அனைத்து அம்சங்களையும், புதிய 'X' சாட் சேவை பயனர்களுக்கு வழங்குகிறது. எக்ஸ் தளத்தின் மெசேஜ் சேவையில் இணைக்கப்பட்டிருக்கும் புதிய அம்சம், விரைவில் தனி செயலியாக வெளியாக வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

'X' சாட் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மஸ்க், விரைவில் 'X' Money எனப்படும் ‘எக்ஸ் பணம்’ சேவையும் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இது மெட்டா, கூகுள் நிறுவனங்களை போன்று, அனைத்து இணைய சேவைகளிலும் ‘எக்ஸ்’ கால்பதிக்க வேண்டி வகுக்கப்பட்டிருக்கும் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'X' சாட் பாதுகாப்பை பிரதானமாக முன்வைத்துள்ளது. இந்த சேவையின் மூலம் நாம் மேற்கொள்ளும் அனைத்து உரையாடல்களும் பாதுகாப்பான எண்டு-டூ-எண்டு என்கிரிப்ஷன் முறையில் அனுப்பப்படுகிறது.

எளிதாக சொல்ல வேண்டும் என்றால், நாம் ‘எப்படி இருக்கீங்க’ என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினால், அது கிளவுட் நெட்வொர்க் வாயிலாக பெறுநருக்கு செல்லும் முன் வேறு குறியீடாக மாற்றப்படும். மீண்டும் பெறுநருக்கு அந்த குறுஞ்செய்தி கிடைக்கும்போது, நாம் அனுப்பியது போன்ற அதே தோற்றத்தில் குறுஞ்செய்தி பெறுநருக்குக் கிடைக்கும்.

அதாவது நாம் அனுப்பும் அனைத்து செய்திகளும் குறியீடாக மாற்றப்பட்டு, பெறுநருக்கு சென்று சேர்கையில் சரியான தகவலாக காட்டப்படும். இதனால், இடைமறித்து பயனர் தகவலை ஹேக்கர்கள் திருடவோ, ஒட்டு கேட்கவோ முடியாது. இந்த சேவையை வழங்கும் ‘எக்ஸ்’ நிறுவனம் நினைத்தால் கூட, பயனர் அனுப்பும் தகவலை பார்க்க முடியாது என்பது தான் உண்மை.

மேலும், ஒருவருக்கு ஒரு செய்தியை அனுப்பும் போது கால அளவை நிர்ணயித்து அனுப்ப முடியும். அந்த நேரம் முடிந்தவுடன் செய்தி தானகவே அழிந்துவிடும். இதில் சிறப்பு என்னவென்றால், ‘இந்த மெசேஜ் டெலிட் செய்யப்பட்டது’ போன்ற எவ்வித சமிஞ்சையும் அரட்டை பெட்டியில் (Chat box) காட்டாமல் நாம் அனுப்பிய செய்தி அழிக்கப்பட்டு விடும். இது வாட்ஸ்ஆப் மெசஞ்சரில் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக, இந்த சேவையைப் பயன்படுத்தும் பிறர் நம் புகைப்படத்தையோ, நம் அரட்டை பெட்டியையோ ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடை செய்ய தனியாக ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. யாரேனும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முற்பட்டால், எந்த கணக்கில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை எக்ஸ் நம்மிடம் போட்டுக்கொடுத்து விடுகிறது.

இவை மட்டுமில்லாமல், அனைத்து விதமான காணொலி, குரலொலி அழைப்புகளும் எண்டு-டூ-எண்டு என்கிரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். விரைவில் இந்த சேவைகள அனைத்து ஆண்ட்ராய்டு போன் செயலிகளுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

பெரும் பயனர் பட்டாளத்தை தனதாகக் கொண்டிருக்கும் வாட்ஸ்ஆப் ஒரு பக்கத்தில் இருந்தாலும், 'X' சாட் வழங்கக்கூடிய சில பாதுகாப்பு அம்சங்கள் பயனர்களின் முக்கியத் தேவையாக இருப்பது, மறுக்க முடியாத உண்மை.