வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் கைது
வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன் நகரின் மையப்பகுதியில், வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
மேற்கு விர்ஜீனியா தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்த வீரர்கள், உடனடியாக சிகிச்சைக்காக இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு, தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தனர். தாக்குதலின்போது அந்த நபரும் கடுமையாகக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேங்க்ஸ்கிவிங் விடுறையை கொண்டாடுவதற்காக புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ விருந்தகத்தில் இருந்தார். இந்த தாக்குதல் குறித்த விவரங்கள் உடனடியாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளியை ‘மிருகம்’ என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், "காயமடைந்திருந்தாலும், அந்த மிருகம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்," என்று எச்சரித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை பாராட்டியுள்ள ட்ரம்ப், இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பை மேலும் பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, வாஷிங்டன் நகரத்துக்கு மேலும் 500 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.