டிரம்பின் அடுத்த அதிரடி - கனரக வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி நவம்பர் 1 முதல் அமல்!

டிரம்பின் அடுத்த அதிரடி - கனரக வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி நவம்பர் 1 முதல் அமல்!

 வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கு வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து உலக நாடுகள் மீது கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இதில், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம்காட்டி, இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வரி விதிப்பால், தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் விவசாயம் சார்ந்த வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படுவதாக தொழில் துறையினர் கவலை தெரிவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. இதுதொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு, நவம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக டிரம்ப் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தனது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் (Truth Social) வெளியிட்டுள்ள பதிவில், "பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு, நவம்பர் 1, 2025 முதல் 25 சதவீதம்
இறக்குமதி வரி விதிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அமெரிக்க வர்த்தக சபை வழங்கியுள்ள தரவுகளின்படி, சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்கர்கள் கனரக மற்றும் டிராக்டர் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும், பலர் மெக்கானிக் மற்றும் துணை ஊழியர்களாக வேலை பார்த்து வருகி்ன்றனர். சுங்க மதிப்பின் அடிப்படையில், அமெரிக்காவிற்கு கனரக வாகங்களை இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளில் முதல் 5 இடத்தில் மெக்சிகோ, கனடா, ஜப்பான், ஜெர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.