''பழகுவது போல் நாடகமாடி தோழி வீட்டில் கைவரிசை'' - பெண் அதிரடி கைது; நகைகள் பறிமுதல்
சென்னை, கே.கே. நகரில் தோழியின் வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சென்னை கே.கே. நகர் ஆற்காடு சாலையில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜெயலட்சுமி (34). இவர் சினிமா துறையில் வேலை செய்து வருகிறார். கடந்த 19 ஆம் தேதி அன்று ஜெயலட்சுமி தனது வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளை சரி பார்த்த போது தங்க சங்கிலிகள், ஒரு டாலர் மற்றும் ஒரு மெட்டி, மூக்குத்தி ஆகியவை காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வீட்டில் அனைத்து பகுதிகளிலும் தேடியும் கிடைக்காததால் யாராவது நகைகளை திருடி சென்றிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் ஜெயலட்சுமி சென்னை கே.கே. நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஜெயலட்சுமி வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும், கைரேகை நிபுணர்களை வைத்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் ஜெயலட்சுமியின் தோழியான ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோனிஷா (30) என்பவர் நகைகளை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து கேகே நகர் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் மோனிஷா ஜெயலட்சுமியுடன் சினிமா துறையில் வேலை செய்து வருவதும், தோழி ஜெயலட்சுமியின் இல்லத்திற்கு அடிக்கடி சென்று வருவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு தோழி ஜெயலட்சுமியின் இல்லத்தில் மோனிஷா தங்கி இருந்துள்ளார். அப்போது பீரோவில் வைத்திருந்த நகைகளை மோனிஷா திருடி சென்று, வீட்டில் பதுக்கி வைத்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்து 7.05 கிராம் எடை கொண்ட 1 தங்க செயின், 1 டாலர், 2 மோதிரங்கள் மற்றும் 5 மூக்குத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மோனிஷா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சினிமா துறையில் பணிபுரிந்து வரும் பெண் தன்னுடைய நெருங்கிய தோழி வீட்டில் தங்கி இருந்து அவரது நகைகளையே திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.