‘ஆர்யன்’ தெலுங்கு வெளியீடு தள்ளிவைப்பு

‘ஆர்யன்’ தெலுங்கு வெளியீடு தள்ளிவைப்பு

‘ஆர்யன்’ படத்தின் தெலுங்கு வெளியீடு ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 31-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தின் தெலுங்கு வெளியீடு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 31-ம் தேதி ‘பாகுபலி: தி எபிக்’ மற்றும் ‘மாஸ் ஜாத்ரா’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதனை கணக்கில் கொண்டு நவம்பர் 7-ம் தேதி ‘ஆர்யன்’ வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

”‘கட்டாகுஸ்தி’ படத்தினை விஷ்ணு விஷாலுடன் இணைந்து தயாரித்திருந்தார் ரவி தேஜா. அவருடைய படமான ‘மாஸ் ஜாத்ரா’ அக்டோபர் 31-ம் தேதி வெளியாகிறது.

மேலும், வாழ்க்கை முழுக்கவே எஸ்.எஸ்.ராஜமவுலியின் ரசிகன் என்பதும் ஒரு காரணம்” என்று ’ஆர்யன்’ வெளியீடு தள்ளிவைப்புக்கான காரணத்தை விளக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தினை விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ளார். முழுக்க சைக்கோ த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது.