லா லிகாவில் தொடர் வெற்றியை குவிக்கும் ரியல் மேட்ரிட்! அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய பார்சிலோனா!

லா லிகாவில் தொடர் வெற்றியை குவிக்கும் ரியல் மேட்ரிட்! அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய பார்சிலோனா!

வில்லார்ரியல் அணிக்கு எதிரான லா லிகா லீக் போட்டியில் ரியல் மேட்ரிட் அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது.

ஸ்பெய்னின் புகழ் பெற்ற கால்பந்து தொடரான லா லிகா தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற லீக் போட்டியில் ரியல் மேட்ரிட் அணியை எதிர்த்து வில்லார்ரியல் சி.எஃப். (Villarreal CF) அணி பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக செயல்பட்டதுடன், எதிரணியின் கோலடிக்கும் வாய்ப்புகளையும் முறியடித்தன.

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணியும் கோல்கள் ஏதுமின்றி சமனிலையில் இருந்தன. பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட மேட்ரிட் அணியின் வினீசியஸ் ஜூனியர் ஆட்டத்தின் 47ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திய வினீசியஸ், அதனையும் கோலாக மாற்றி அசத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்ட வில்லார்ரியல் அணிக்கு ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் ஜார்ஜஸ் மிகௌடாட்ஸேவே கோலடித்து நம்பிக்கை கொடுத்தார். அதன் பிறகு மேட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிலியான் எம்பாப்பே ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் கோலடித்ததுடன், அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். மறுபக்கம் வில்லார்ரியல் அணி இறுதிவரை போராடிய நிலையிலும், மேற்கொண்டு எந்த கோல்களையும் அடிக்க முடியவில்லை.

இதன் மூலம் ஆட்டநேர முடிவில் ரியல் மேட்ரிட் அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வில்லார்ரியல் சி.எஃப். அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு லா லிகா தொடரில் ரியல் மேட்ரிட் அணி தங்களுடைய 7ஆவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், 21 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் பார்சிலோனா எஃப்.சி. மற்றும் செவில்லா எஃப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட செவில்லா அணிக்கு, முதல் பாதியின் 13ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திய அலெக்சிஸ் சான்செஸ் அதனைக் கோலாக மாற்றி, அணியை முன்னிலைப் படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் ஐசக் ரொமெரோவும் கோலடிக்க செவில்லா அணி 2 கோல்களுடன் முன்னிலைப் பெற்றது. பிறகு முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரமான 45+7ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் மார்கஸ் ரஷ்ஃபோர்ட் கோலடித்தார். இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் செவில்லா அணி 2 கோல்களையும், பார்சிலோனா அணி ஒரு கோலையும் பதிவு செய்திருந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்திலும் தங்களுடைய ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்ட செவில்லா அணிக்கு 90ஆவது நிமிடத்தில் ஜோஸ் ஏஞ்சல் கார்மோனாவும், 90+6ஆவது நிமிடத்தில் அகொர் ஆடம்ஸும் கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அதேசமயம் இறுதிவரை போராடிய பார்சிலோனா அணியால், எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி மேற்கொண்டு எந்தவொரு கோலையும் பதிவுசெய்ய முடியவில்லை.

இதன் காரணமாக ஆட்டநேர முடிவில் செவில்லா எஃப்சி அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் ஃபார்சிலோனா எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் நடப்பு லாலிகா தொடரில் பார்சிலோனா அணியின் முதல் தோல்வியாகவும் இது அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் செவில்லா அணி 13 புள்ளிகளுடன் பட்டியலின் 6ஆம் இடத்தையும், படுதோல்வியைச் சந்தித்த பார்சிலோனா அணி 19 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.