தெரு நாய்கள் விவகாரத்தில் திருப்பம்: தமிழ்நாடு உள்ளிட்ட 26 மாநில தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!
தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்ளிட்ட 26 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தெரு நாய்கள் தொல்லை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தெரு நாய்கள் தொல்லை உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில், நாடு முழுவதும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சினிமா நடிகர், நடிகைகள், விலங்குகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, இரண்டு நீதிபதிகள் அமர்வில் இருந்து இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அதே தெருவில் விடலாம். அவைகளை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படிந்து மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி மட்டுமே பிரமாணப் பத்திரம் செய்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், மற்ற மாநிலங்கள் ஏன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நவம்பர் 3 ஆம் தேதி அந்த மாநிலங்களை சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.