புயலால் பேரழிவு... மீள முடியாமல் திணறும் இலங்கை

புயலால் பேரழிவு... மீள முடியாமல் திணறும் இலங்கை

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெரும் சேதத்தை ஏற்பட்டதையடுத்து, இன்னும் நிலைமையை சரிசெய்ய முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

கடந்த நவம்பரில் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத கனமழை பெய்து, மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இந்த புயலின் தாக்கத்தால் கிட்டத்தட்ட இலங்கை முழுக்க கடுமையான உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டது. குறிப்பாக, இலங்கையின் கிழக்கு மாகாணங்களான மட்டக்களப்பு, திரிகோணமலை மற்றும் வடக்கு மாகாணங்களான யாழ்ப்பாணம், மாத்தளை போன்ற பகுதிகள் பெரும் அழிவை சந்தித்தன.

குறிப்பாக, மதுளை, கேகாலை போன்ற மலைப்பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவால் பல கிராமங்கள் புதையுண்டன. டிட்வா புயலால் இலங்கையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், பலர் காணமால் போனதாக கூறப்பட்டது.

புயலின் தாக்கம் ஓயவில்லை

புயல் ஓய்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆகிவிட்ட போதிலும், அதனால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, இலங்கை இன்றுவரை தொடர்ச்சியான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை சந்தித்து வருகிறது. கடல் வெப்பநிலை அதிகரிப்பால் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் புயலின் தாக்கம் மிக உக்கிரமாக இருப்பதை போல, இம்முறை இலங்கையையும் தாக்கி இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

டிட்வா புயல் காரணமாக வீசிய சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் வீடுகளை இழந்த நிலையில், சுமார் 2 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பல இடங்களில் நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்ட நிலையில், ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அரசாங்கமும் சிவில் சமூகமும் இணைந்து பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இன்றுவரை நிலைமையை சரிசெய்ய முடியவில்லை.

மோசமாகும் நலிவடைந்தோரின் நிலை

ஏற்கனவே கடந்த சில வருடங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிற இலங்கை அரசாங்கத்திற்கு, டிட்வா புயல் மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. புயலின் வெள்ளத்தால் இலங்கையில் கிட்டத்தட்ட 20 சதவீத நிலப்பரப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்திருக்கிறது. மேலும், இலங்கை முழுவதும் சுமார் 1,200 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறது. இதனால் வீடுகள், பொது இடங்கள் மற்றும் பயிர்கள் என அனைத்தும் அழிந்திருப்பதாக கூறியுள்ளது.

இந்த நிலைமையை சமாளிக்க முடியாத இலங்கை அரசாங்கம், சர்வதேச நன்கொடையாளர்களை நாடியிருக்கிறது. அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ முன்வந்துள்ளனர் என ஐ.நா தெரிவித்திருக்கிறது. ஏனெனில், இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே நிலையற்ற வருமானம், அதிக கடன் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளது. அதில், புத்தளம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் வாழ்கிற விளிம்பு நிலை மக்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவில் அமைப்புகளுக்கு அரசின் ஆதரவு தேவை

இலங்கையில் இதற்கு முன்பும் பல பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அப்போதும் சிவில் சமூக அமைப்புகளின் அலட்சியப்போக்கே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதேபோன்று, டிட்வா புயலினால் ஏற்பட்ட மோசமான பாதிப்பிற்கு சிவில் சமூக அமைப்புகள் பதிலளிக்க வேண்டிய இடத்தில் உள்ளன. ஆனால், மீட்புப் பணிகளை சுலபமாக்குவதற்கு பதிலாக, அரசாங்கமானது அவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை விதித்து வருகின்றன. குறிப்பாக, சிறு தவறுகளுக்கு கூட கடுமையாக தண்டனைகள் விதித்தல் மற்றும் நிதி வழங்குவதற்கு தடை விதித்தல் போன்றவைகள் இதில் அடக்கம்.

இதற்கிடையே, இலங்கை அதிகாரிகள் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க, வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், அரசாங்கம் சிவில் அமைப்புகளை சந்தேகத்திற்கிடமாக நடத்துவதற்கு பதிலாக, அவர்களுக்கு ஆதரவும் அதிகாரமும் அளித்து, உரிய நிவாரணங்களை பெற வழிவகை செய்ய வேண்டும்.