பிரபல நடிகை காரில் கடத்தல்... அதிர்ச்சி சம்பவம்
பிரபல நடிகையை காலை நேரத்தில் காரில் வைத்து கடத்திச் சென்ற சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை சைத்ரா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கும் வர்தன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான ஹர்ஷவர்தன் என்பவருக்கும் 2023ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு வயது மகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தகராறு காரணமாக கடந்த ஏழு முதல் எட்டு மாதங்களாக பிரிந்து வசித்து வரும் நிலையில் ஹர்ஷவர்தன் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியிலும், நடிகை சைத்ரா பெங்களூருவிலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். நடிகை சைத்ரா தான் குழந்தையை பராமரித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 7ஆம் தேதி படப்பிடிப்புக்காக மைசூர் செல்வதாக தெரிவித்துவிட்டு சென்ற நடிகை சைத்ராவை கடத்திச் சென்றதாக புகார் எழுந்தது. சைத்ராவின் சகோதரி அளித்த புகாரில், கணவர் ஹர்ஷவர்தன் தான் மனைவியை கடத்திச் சென்றதாகவும், குழந்தையை மனைவியிடம் இருந்து பிரித்து தன்னுடன் அழைத்துச் செல்ல திட்டமிட்டு இந்த கடத்தல் சம்பவத்தை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்ஷவர்தன், தனது கூட்டாளியான கௌசிக் உதவியுடன், சைத்ராவை மைசூர் சாலை மெட்ரோ நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து காரில் அவரை கடத்தியதாகவும் புகாரில் சொல்லப்பட்டுள்ளது. சைத்ரா தனது நண்பர் ஒருவருக்கு கடத்தப்பட்ட தகவலை கூற, அதன்பின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின், அன்றைய தினம் மாலை, ஹர்ஷ்வர்தன் தனது மனைவி சைத்ராவின் அம்மாவை அழைத்து கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டதோடு, தனது குழந்தையை "சொல்லும் இடத்திற்கு அழைத்து வரவில்லையெனில், அவ்வளவு தான்... சைத்ராவை விடுவிக்க போவதில்லை" என மிரட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.