தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ்- தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிராத்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை திருப்பலி கூட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். இதேபோன்று கோவை ,மதுரை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின.
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழவதும் உள்ள கிறிஸ்துவ சமூக மக்களும் இயேசு கிறிஸ்துவை வரவேற்கும் விதமாக, தேவாலயங்களில் நள்ளிரவு மூலம் பிரார்த்தனைகளை மேற்கொண்டு பண்டிகையை கொண்டாடினர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்புப் பிரார்த்தனை திருப்பலி கூட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்தும் விடியற்காலையில் ஆராதனைகள் நடைப்பெற்றன. குறிப்பாக, சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் மற்றும் நரசிங்கபுரம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவ சமூக மக்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதேபோல் மயிலாப்பூர் லஸ் தேவாலயம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன. இதில், குழந்தை இயேசு தொழுவத்தில் பிறந்ததை நினைவுகூரும் வகையில், தேவாலயங்களில் வெவ்வேறு வடிவமைப்புகளில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமான கிறிஸ்தவ மக்கள் குடும்பமாக வருகை புரிந்து கிறிஸ்துமஸ் நாள் பாடல்களை பாடி, சிறப்பு திருப்பலி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் பகிர்ந்து கொண்டும், பரிசுகள் வழங்கியும் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் தேவாலயங்களில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நேற்றிரவு முழுவதும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.