திட்டக்குடி விபத்தில் பலி 9ஆக உயர்வு! பஸ் டிரைவர் கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அரசு பஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் (SETC) பேருந்து ஒன்று நேற்று (டிச.24) இரவு புறப்பட்டு சென்றது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த எழுந்தூர் பகுதியில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு, எதிர்திசையில் (சென்னையிலிருந்து திருச்சி நோக்கி) வந்த 2 கார்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் இரண்டு கார்களும் பேருந்தின் அடியில் சிக்கி உருக்குலைந்தன. அதில் கார்களில் பயணித்த 2 குழந்தைகள், பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, காயமடைந்த நபர்களை பெரம்பலூர் மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமும் வழங்கி உத்தரவிட்டார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த விபத்தில் திருச்சி, திருவெறும்பூர் மற்றும் காட்டூர் பகுதியை சேர்ந்த முகமது பாரூக், அப்துல் பத்தா, பரிதா, குருஜித் பாத்திமா, ரியானா மற்றும் சைலோ கார் ஓட்டுநர் துரைராஜ், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜரத்தினம், ராஜேஸ்வரி, ஜெயக்குமார் ஆகிய 9 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருனாளினி, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.எஸ்.பசேரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை போலீசார் கைது செய்தனர். அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியது, வாகனத்தை இயக்குவதற்கு முன்பு உரிய சோதனைகளை செய்ய தவறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.