“இந்தியை எதிர்த்து போராடிய மாணவர்களை சுடச் சொன்னவர் ஈவெரா” - சீமான் சீற்றம்

“இந்தியை எதிர்த்து போராடிய மாணவர்களை சுடச் சொன்னவர் ஈவெரா” - சீமான் சீற்றம்

‘‘இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுடச் சொன்னவர் ஈவெரா. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம் தான்’’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று திருச்சிவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று தான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார். ஆனால், திராவிடம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான். அவர் தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப் பேசுகிறார்.

திராவிடம் தமிழை எங்கே காக்கிறது? தமிழகத்தில் தமிழ் படிக்கவோ, பேசவோ, எழுதவோ தெரியாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுடச் சொன்னவர் ஈவெரா. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம் தான். போதைப் பொருள் குறித்து பேச தமிழக அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை. போதைப் பொருளைத் தடுப்போம் என முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

காவல் துறை ஆதரவில்லாமல் போதைப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. மக்களின் கோரிக்கைகளை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிப்போம் என திமுக கூறி உள்ளது. மக்களுக்கு என்ன பிரச்சினை என தெரியாமலேயே ஆட்சி செய்கிறீர்களா என்கிற கேள்வியை இது எழுப்பி உள்ளது. இந்த மண்ணில் நிலவும் திராவிடம், இந்தியம் என்கிற ஆட்சி முறையை மாற்றுவது தான் மாற்றம். கூட்டணி மாறுவதால் ஆட்சி மாறும். ஆனால், ஆட்சி முறை மாறாது.