'குட் பேட் அக்லி' திரைப்பட விவகாரம்: தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

'குட் பேட் அக்லி' திரைப்பட விவகாரம்:  தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக் கோரி 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் உரிமையை, சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும், தற்போது இளையராஜா பாடல்களை திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி என்.செந்தில் குமார் விசாரித்தார். அப்போது இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில், திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து பாடல் உரிமையை வாங்கியதாக கூறுகிறார்கள். பதிப்புரிமை சட்டப்படி, இசையமைப்பாளர்களிடம் தான் பாடல் உரிமைகள் உள்ளன. ஒட்டுமொத்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளருக்கு உரிமை இருந்தாலும், பாடல்களை தனியாக எடுத்து மூன்றாம் நபருக்கு விற்க தயாரிப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தயாரிப்பாளர்களிடம் தான் திரைப்படத்தின் முழு உரிமையும் உள்ளது. இளையராஜாவிடம் இசை உரிமை இருந்தால் அதை அவர் தான் நிரூபிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நீதிபதி செந்தில் குமார், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் இன்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், பாடல்களை உருமாற்றம் செய்வது மற்றும் அனுமதி இன்றி பயன்படுத்துவதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உள்ளது. அதனால் இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். மேலும், பிரதான வழக்கின் விசாரணையை 2026-ம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.