திவாகர் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி தரம் தாழ்ந்து விடாது! நடிகர் ரஞ்சித் பேட்டி!

திவாகர் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி தரம் தாழ்ந்து விடாது என நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார்.
வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ திரைப்படத்தை நடிகர் பார்த்திபன் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி, இயக்கி உள்ளார். ரஞ்சித், மெகாலி, மீனாட்சி, விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் கந்து வட்டியால் குடும்பங்கள் சிக்கி தவிக்கும் பிரச்சனையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் ரஞ்சித் பேசுகையில், இப்போது உள்ள காலகட்டத்தில் கந்துவட்டி வட்டியில் இருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, அதற்கு நடிகர் ரஞ்சித் உடனே கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் ரஞ்சித், “நான் படம் நடிக்கும் காலகட்டத்தில் கந்துவட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறேன். அதனால் தான் கூறுகிறேன், தேவைக்கேற்ப ஒரு வரைமுறை உடன் இருங்கள் கடன் வாங்காதீர்கள். அது நிம்மதியை கெடுத்துவிடும்” என்றார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர் உள்ளிட்டோர் இம்முறை கலந்து கொண்டு உள்ளார்கள். அதனால் இந்த நிகழ்ச்சி தரம் தாழ்ந்து விட்டதாக பேசப்படுவதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நடிகர் ரஞ்சித், “அவர் பங்கேற்றதால் தரம் தாழ்ந்து விட்டது என்பது கிடையாது, இந்த பிக்பாஸ் வீட்டில் யாராக இருந்தாலும் கெட்டவர்கள் தாக்குப் பிடிக்க முடியாது. மேலும் அது கன்டென்ட் கொடுப்பதற்கான நிகழ்ச்சி, அதில் கன்டென்ட் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அதே சமயம் மக்களின் அபிமானம் பெற்ற போட்டியாளரே வெற்றி பெற முடியும்” என்றார்.
நீங்கள் வில்லன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள், இப்போது ஏன் அவ்வாறு நடிப்பதில்லை என்கிற கேள்விக்கு, ”எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நான் நடிப்பேன். நல்ல கதை அம்சத்துடன் என்னை யாரும் அணுகவில்லை, நல்ல கதையுடன் அணுகக் கூடிய பட்சத்தில் நிச்சயம் நடிப்பேன்” என கூறினார்.
நடிகர் ரஞ்சித் கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 60 நாட்களுக்கு மேல் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.