பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு... நள்ளிரவில் வெடித்த போராட்டம்: புதுச்சேரியில் பரபரப்பு!

பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் தமிழகம், புதுவை மற்றும் பல மாநிலங்களைப் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அண்மைக்காலமாக இந்த பல்கலைக்கழகத்தில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக குற்றம்சாட்டி சமூக வலைதளங்களில் சில பதிவுகள் வைரலாகின.
அதன்படி, சமீபத்தில் பல்கலைகழக பேராசிரியர் மாதவையா என்பவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மாணவி ஒருவரின் ஆடியோ வெளியானது. இது குறித்தான புகாரை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்து அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் ஆத்திரமடைந்து நேற்று மதியம் 2.30 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்கள் கலைந்து சென்றால், மட்டுமே துணைவேந்தர் பேச்சுவார்த்தை நடத்துவார் என கல்லுாரி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தின் 5 நுழைவு வாயில்களையும் இழுத்து மூடி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ராஜ்னீஷ் புட்டானி ஆகியோர் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி கொண்டனர். அதேசமயம் நிர்வாக கட்டடத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களை வெளியேற மாணவர்கள் தடங்கல் செய்யவில்லை. மதியம் 2.30 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் நள்ளிரவிலும் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவிக்கையில், ''பல்கலைக்கழகத்தில் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் வருகிறது. அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் உள் விசாரணை குழு காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், தைரியமாக புகார் கொடுக்கும் மாணவிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைப்படி உள் விசாரணை குழுவில் மூன்று மாணவர்கள் இடம்பெற வேண்டும். ஆனால், பல்கலைக்கழக உள் விசாரணை குழுவில் மாணவர்கள் இடம்பெறவில்லை. இதனால், வெளிப்படைத்தன்மை இல்லாமல் விசாரணை மர்மமாகவே நடத்தி முடிக்கப்படுகிறது. எங்களுக்கும் இக்குழு மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளது. இந்த விவகாரத்தில், துணை வேந்தர் எந்த உறுதியும் கொடுக்கவில்லை. பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்'' எனக் கூறினர்.
மேலும் பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், போலீசார் இடையே நள்ளிரவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேராசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசார், மாணவர்களின் தலைமுடியைப் பிடித்து, கால்களால் எட்டி உதைத்த காட்சிகள் வெளியாகியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், குறிப்பிட்ட ஆடியோவில் பேசும் மாணவி, பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்கள் அனுப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், இல்லை என்றால் இன்டர்னல் மார்க்கில் கை வைத்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும் அந்த மாணவி கண்ணீர் மல்க கூறுகிறார். மேலும், இது தனது பெற்றோருக்கு தெரிந்தால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்றும் கண்ணீரோடு அந்த மாணவி கூறியுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம்
இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தனது விளக்கத்தில், ''மாணவர்களுடன் அமைதியான பேச்சுவார்த்தை நடைபெற பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய சூழல், சில அரசியல் நோக்கமுடைய மாணவர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு மோதல் சூழ்நிலையாக மாறிவிட்டது. காவல்துறையினரை தாக்கி காயப்படுத்திய சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுவைப் பல்கலைக்கழக நிர்வாகம் இத்தகைய செயல்பாடுகளை எந்த விதத்திலும் ஆதரிக்கவில்லை. தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் பல்கலைக்கழக அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது'' எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.