பாக்.,- ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது: சொல்கிறார் அதிபர் டிரம்ப்!

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதலை தீர்ப்பது எளிது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்காக போர்களை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் பல முறை கூறி வந்தார். அப்படியிருந்தும் அவருக்கு இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகும், போர் நிறுத்திய கதைகளை டிரம்ப் நிறுத்துவதாக இல்லை. இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட 7 போரை நிறுத்திவிட்டேன் என கூறி வந்த டிரம்ப், காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், 8 போரை நிறுத்திவிட்டேன் என தம்பட்டம் அடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, அவர் ஒரு பக்கம், ஒன்பதாவதாக உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் கூறிவருகிறார்.
தற்போது அவரது கவனம் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதல் பக்கம் திரும்பி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மோதல் குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தற்போது ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு இடையிலான பிரச்னையை தீர்ப்பது எனக்கு எளிது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட எட்டு உலகளாவிய போர்களை தீர்த்துவிட்டேன். நான் ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையைத் தீர்க்கும்போது, அடுத்ததைத் தீர்த்தால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று அவர்கள் சொன்னார்கள்.
எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் அதைப் பெற்றார். மிகவும் நல்ல பெண். ஆனால் எனக்கு அது கவலையில்லை. எனக்கு உயிர்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.