'காதுக்குள் கேட்ட குரல்' - கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட ஐடி ஊழியர்

'காதுக்குள் கேட்ட குரல்' - கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட ஐடி ஊழியர்

காதுக்குள் ஏதோ ஒரு குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ஐடி ஊழியர் ஒருவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நொளம்பூர் அடுத்த மேற்கு முகப்பேர் திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் ரோஷன் நாராயணன் (24). இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது குடும்பத்தினர் திருப்பதிக்கு சென்றனர். இதனால், ரோஷன் நாராயணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இதனையடுத்து, திருப்பதிக்கு சென்றவர்கள் நேற்று அதிகாலையில் வீடு திரும்பினர். இதில், வீட்டின் கதவை தட்டிய நிலையில் நீண்ட நேரமாகியும் ரோஷன் கதவை திறக்கவில்லை. இதனால், அவரது பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரோஷன் உயிரிழந்து கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சில் வந்த செவிலியர்கள், ரோஷன் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த ரோஷன் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். இதில், அவர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், “யாரோ அழைப்பது போன்று ஒரு ஒலி என் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. சண்டை போட்டதால், என் சகோதரரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அம்மா - அப்பா நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள்” இவ்வாறு எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.