ஜெகதீசன், சாய் கிஷோர் அதிரடி... தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு

ஜெகதீசன், சாய் கிஷோர் அதிரடி... தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு

திரிபுரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் டி அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் திரிபுரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸை வென்ற திரிபுரா அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அமித் சாத்விக் 5 ரன்களுக்கும், துஷார் ரஹேஜா 4 ரன்களுக்கும், சாய் சுதர்ஷன் 5 ரன்களுக்கும், முகமது அலி 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தமிழ்நாடு அணி 26 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நாராயண் ஜெகதீசன் - சாய் கிஷோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 83 ரன்களை சேர்த்திருந்த ஜெகதீசன் தனது விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் கிஷோர் 3 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை விளாசி 87 ரன்களை சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் மூலம் தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது. திரிபுரா அணி தரப்பில் சௌரப் தாஸ் 2 விக்கெட்டுகளையும், முராசிங், இந்திரஜித் தப்நாத் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய திரிபுரா அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் 5ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் ஸ்வப்னில் சிங் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியையும் சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.

இதில் ஸ்வப்னில் சிங் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 39 ரன்களைச் சேர்த்த கையோடு விஜய் சங்கரும் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் கேப்டன் முராசிங் 33 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து, மற்ற வீரர்கள் அனைவரும் தமிழக அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

இதனால் திரிபுரா அணி 18.5 ஓவர்களில் 143 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங், நடராஜன், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் தமிழ்நாடு அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், தொடர் தோல்விகளுக்கும் முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.