மதுரை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசு அதிரடி
மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது. மேற்குறிப்பிட்ட 2 நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. தற்போது பல இடங்களில் அதை விரிவுப்படுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரயில் திட்டமானது, மத்திய - மாநில அரசுகளின் நிதி பங்களிப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசியம்.
இதனிடையே, சென்னையை போலவே தொழில் நகரங்களாக வளர்ந்து வரும் கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. வரையில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதேபோல, கோவையிலும் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையிலான மெட்ரோ திட்டத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டே இதற்கான திட்ட அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த திட்டங்களில் மத்திய அரசு பரிந்துரைத்த சில திருத்தங்களை ஏற்று, மீண்டும் தமிழக அரசு சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக அதிரடி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், அதற்கான காரணங்கள் வெளியாகவில்லை. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான சந்திப்பின்போது, இந்த அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, 2017ஆம் ஆண்டின் மெட்ரோ ரயில் கொள்கைபடி, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோவை ஊரகப் பகுதிகளில் 23.5 லட்சம் பேரும், கோவை நகராட்சியில் 15.8 லட்சம் பேரும் வசிப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, மதுரை நகராட்சியில் 15.8 லட்சம் பேரும், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 14.7 லட்சம் பேரும் வசிக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில், மேற்குறிப்பிட்ட இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற நகரங்களுக்கு ஒப்புதல் எப்படி?
அதே சமயத்தில், மதுரை, கோவையை காட்டிலும் மக்கள்தொகை குறைவாக உள்ள உ.பி.யின் ஆக்ரா (16 லட்சம் மக்கள்தொகை), பீகார் தலைநகர் பாட்னா (17 லட்சம்), ம.பி. தலைநகர் போபால் (18 லட்சம்) ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், பல மாநிலங்களில் தலைநகர் அல்லாத இரண்டாம் நிலை (Tier 2) நகரங்களான ஆக்ரா, கான்பூர் (உ.பி.), நாக்பூர், புனே (மகாராஷ்டிரா), இந்தூர் (ம.பி), சூரத் (குஜராத்) ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.