மக்கா சோளத்தில் இருந்து வெல்லம்... கழிவை காசாக்கும் வில்லேஜ் விஞ்ஞானி!

தூக்கி எறியப்படும் விவசாய கழிவுகளை செல்வமாக மாற்றி இந்திய விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த மகாலிங்கப்பா இட்னல். யார் இவர்? விவசாயத்துறையில் இவர் செய்துள்ள மாற்றம் என்ன? என்பதை அறிந்தால், நமக்கே பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கிறது.
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி மகாலிங்கப்பா இட்னல். அப்பகுதியில் மிகவும் அறியப்பட்டவரான இவர், தற்போது இந்திய அளவில் அதிக பேசப்படும் ஒருவராக மாறியுள்ளார். மக்காச்சோள விவசாயம் செய்து வரும் இவர், தற்போது அதனை பயன்படுத்தி வெல்லத்தை கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சாதாரணமாக கரும்பை பயன்படுத்தி வெல்லம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய முயற்சியாக தற்போது மக்களாச்சோளத்தை பயன்படுத்தி அவர் வெல்லத்தை உருவாக்கியுள்ளார்.
வேளாண் துறை அல்லது வேளாண் அறிவியல் மையங்களில் இதுபோன்ற புதிய முயற்சிகள் இதுவரை நிகழ்த்தப்படாத நிலையில், மகாலிங்கப்பா இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் வேளாண் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வகங்களில் மட்டுமல்லாமல் விவசாயிகளிடமிருந்தும் வரும் என்பதை தனது புதிய ஆராய்ச்சியின் மூலம் நிகழ்த்தி காட்டியுள்ளார்.
பொதுவாக சோளத் தண்டுகள் கால்நடைத் தீவனமாக பயன்படுத்தப்படும் அல்லது சந்தையில் பச்சையாக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும். இதனால் விவசாயிகளுக்கு குறைந்த அளவிலான லாபம் மட்டுமே கிடைக்கும். இதனை மாற்ற வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார் மகாலிங்கப்பா. அதன் நீட்சியாக மக்காச்சோளத்தின் தண்டுகளில் மறைந்திருக்கும் சர்க்கரை உள்ளடக்கத்தை அவர் கண்டறிந்தார். சாதாரண கரும்புக்கு பயன்படுத்தப்படும் பாரம்பரிய வெல்லம் தயாரிக்கும் செயல்முறைகளை சிறிது மாற்றியமைப்பதன் மூலம், சோளத் தண்டுகளில் இருந்து வெல்லம் தயாரிப்பதில் வெற்றிபெற்றார். முன்பு கழிவுகளாக தூக்கி எறியப்பட்டவை தற்போது புதிய வருவாய் ஆதாரமாக அவர் மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக மகாலிங்கப்பா ஈடிவி பாரத்திடம் கூறும்போது, "பொதுவாக கரும்பில் இருந்துதான் வெல்லம் தயாரிப்பார்கள். ஆனால், தற்போது புதிய முயற்சியாக மக்காச்சோளத்தில் இருந்து வெல்லம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்றுள்ளோம். கரும்பு பயிரிட 12 மாதங்கள் வரை ஆகும். ஆனால், மக்காச்சோளம் பயிரிட 120 நாட்கள் போதுமானவை. இதனால் நாம் வருடத்திற்கு இரண்டு முறை சோளத்தை பயிரிடலாம். மேலும், மக்காச்சோளத் தண்டுகளில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டசத்துக்கள் ஏராளம் உள்ளது. கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தை விட தரத்தில் சிறந்தது என்பதை கண்டறிந்துள்ளோம்" என்றார்.
வரும் அக்டோபர் 8ஆம் தேதி தார்வாட் வேளாண் பலர்கலைக்கழக விஞ்ஞானிகள் முன் மகாலிங்கப்பா மக்கா சோளத்தில் இருந்து வெல்லம் தயாரிக்கும் செயல்முறையினை செய்து காட்டவுள்ளார்.