கௌரி கிஷனை பிரபலப்படுத்திய யூடியூபர்களுக்கு நன்றி! நடிகர் கூல் சுரேஷ்

கௌரி கிஷனை பிரபலப்படுத்திய யூடியூபர்களுக்கு நன்றி! நடிகர் கூல் சுரேஷ்

நடிகை கௌரி கிஷனை பிரபலப்படுத்திய யூடியூபர்களுக்கு நன்றி என நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

மிஸ்ரி எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’. இந்த திரைப்படத்தை ரஜினி கிஷன் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்தில் திவிவிக்கா நாயகியாகவும் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

இத் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. விழாவில் நடிகர் முனிஷ்காந்த் பேசுகையில், “படத்தின் தயாரிப்பாளரே நடிகராக நடித்துள்ளார், இப்படத்தில் நான் நடித்த பத்து நாட்களில், ஏழு நாட்கள் இரவு பகலாக காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் கதாநாயகன் கொஞ்சம் கூட சோர்ந்து விடவில்லை. அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

நானும் அவரும் ஒரு காட்சியில் இணைந்து நடிப்பது போல, படமாக்கி இருந்தோம். அதில் ஒரே டேக்கில் நான் காட்சியை நடித்து முடித்தேன். உடனடியாக அவர் என்னை பாராட்டினார். நான் கூட நடிப்பதை வைத்து பாராட்டுகிறார்கள் என நினைத்தேன். ஆனால் தயாரிப்பு செலவை குறைக்கும் விதத்தில் விரைவாக நடித்த முடித்ததற்காக பாராட்டியிருக்கிறார் என்பது பிறகு தான் தெரிய வந்தது” என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “பல படங்களுக்கு திரையரங்குகளில் வாசலில் நின்று விளம்பரம் செய்துள்ளேன். அப்போது என்னுடைய ரசிகர்கள் நீங்கள் எப்போது கதாநாயகனாக நடிக்கப் போகிறீர்கள் எனக் கேட்பார்கள். அவர்களுக்காகவே இந்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். இதில் நான் இரண்டாவது கதாநாயகனாக நடித்துள்ளேன். எனக்கென தனியாக பாடல், சண்டைக் காட்சிகள் உள்ளன. மேலும் படத்தில் கதாநாயகி பேய் பிடித்து என்னை அடிப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சியை சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம்.

இந்த படத்தில் கதாநாயகி கதாநாயகனுடன் நெருங்கி பழகுவதை விட, நாயுடன் நெருங்கி பழகியுள்ளார். படத்தில் கதாநாயகன் பெயர் ரஜினி கிஷன். தற்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கும் கௌரி கிஷனுக்கும், அவருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இருப்பினும் கௌரி கிஷனை இந்த அளவிற்கு பிரபலப்படுத்திய யூடியூபர்களுக்கு நன்றி. இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றியடைந்த பின் தயாரிப்பாளர் எனக்கு தங்க சங்கிலி அணிவிப்பார் அல்லது அவர் என்னை கதாநாயகனாக அடுத்த படத்தில் நடிக்க வைத்தால் நான் அவருக்கு நிச்சயமாக தங்கச் சங்கிலி அணிவிப்பேன்” என்றார்.