துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூரில் ஆட்சியர் மரியாதை
கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு இன்று கொண்டு வரப்பட்ட துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி 'விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் கோவை சூலூரில் உள்ள விமான சாகச படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் விமானப்படை அதிகாரியாக சூலூர் வளாகத்தில் பணியாற்றி வருகிறார். ஆறு வயது மகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார்.
விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் பூத உடல் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட விமானப்படை அதிகாரிகள் அலுவலர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.