இனிமேல் சிம் கார்டு ஆக்ட்டிவில் இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப்

இனிமேல் சிம் கார்டு ஆக்ட்டிவில் இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப்

இனிமேல் சிம் கார்டு ஆக்ட்டிவில் இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளை பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற தகவல் பரிமாற்ற சேவைகளை பயன்படுத்த தரவிறக்கம் செய்து உள்ளே நுழைந்ததும் கொடுக்கப்பட்டிருக்கும் எண் சரிபார்க்கப்படும். அதற்கு அந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஓடிபி எண் அனுப்பப்படும் அல்லது மிஸ்டு கால் கொடுக்கப்படும். இதனால் ஒருமுறை செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துவிட்டால் அந்த சிம் கார்டு ஆக்ட்டிவாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து செயலியை பயன்படுத்த முடியும். இந்த முறைதான் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது.

இந்நிலையில், நவம்பர் 28ஆம் தேதி மத்திய தொலைத்தொடர்பு துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, இனிமேல் messaging apps என்று சொல்லக்கூடிய தகவல் பரிமாற்ற செயலிகளை பயன்படுத்த சிம் கார்டு கட்டாயம் பயன்பாட்டில் இருக்க வேண்டும். இந்த விதிமுறையை இணைய பாதுகாப்பு கொள்கை திருத்த விதிகள் 2025இன் கீழ் தகவல் தொலைத்தொடர்பு துறை (DoT) கொண்டுவந்திருக்கிறது.

இதனால் இந்தியாவில் தகவல் பரிமாற்ற செயலிகள் என்று சொல்லப்படுகிற வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்நாப்சாட், ஷேர்சாட், ஜியோசாட், ஜோஷ் போன்ற செயலிகளுடன் இணைக்கப்பட்டுள்ள எண்ணின் சிம் கார்டு, பயனரின் டிவைசில் ஆக்ட்டிவில் இருப்பதை 90 நாட்களுக்குள் உறுதி செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறது.

சைபர் குற்றங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை

ஒருமுறை தகவல் பரிமாற்ற செயலியை ஆக்ட்டிவ் செய்தபிறகு சிம் கார்டை டிவைசிலிருந்து எடுத்துவிட்டாலும் அல்லது அந்த சிம் கார்டு செயலிழந்துவிட்டாலும் தொடர்ந்து செயலியை பயன்படுத்த முடியும். இதனால் சைபர் குற்றங்களுக்கு இதுபோன்ற செயலிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். எப்படியெனில், ஒருமுறை செயலிகளை ஆக்ட்டிவ் செய்துவிட்டு, சிம்கார்டை செயலிழக்க வைக்கின்றனர்.

இதனால் நாட்டிற்கு வெளியே இருந்துகொண்டுகூட சைபர் குற்றங்களில் ஈடுபட இதுபோன்ற செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தொலைத்தொடர்பு சேவைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த புதிய விதிமுறையை கொண்டுவந்திருப்பதாக தகவல் தொலைத்தொடர்பு துறை தெரிவித்திருக்கிறது.

வெப் பிரவுசர்கள் மூலம் செயலிகளை பயன்படுத்தவும் விதிமுறை

வெப் பிரவுசர்களில் QR குறியீட்டை பயன்படுத்தி வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தினால் அதை நாமாக லாக் அவுட் செய்யும்வரை அப்படியே தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால் இந்த புதிய விதிமுறைப்படி, 6 மணிநேரத்திற்கு ஒருமுறை தானாகவே சைன் அவுட் / லாக் அவுட் ஆகிவிடும். மீண்டும் QR குறியீட்டை பயன்படுத்திதான் உள்நுழைய முடியும்.

இந்தியாவில் செயலி தகவல் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகிற அனைத்து நிறுவனங்களும் 120 நாட்களுக்குள் இந்த விதிமுறைகளுக்கான இணக்க அறிக்கைகளை தகவல் தொலைத்தொடர்பு துறைக்கு சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி சமர்ப்பிக்காத பட்சத்தில், தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் போன்ற தொலைத்தொடர்பு சட்டம் 2023இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறது.