திருவள்ளுரில் புது உதயம் !உங்க கனவை சொல்லுங்க திட்டம்: துவக்கி வைக்கிறார் ஸ்டாலின்
cm--launch-today-in-thiruvallur-about-the-scheme-of-unga-kanava-sollunga'
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ”உங்க கனவை சொல்லுங்க ” திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க உள்ளார்.
கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ள புதிய மக்கள் தொடர்பு திட்டம் குறித்து விரிவாக விளக்கினார். உங்க கனவை சொல்லுங்க திட்டம் பற்றி அப்போது அவர் பேசும்போது, தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள், மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளன.. அந்த வரிசையில், அடுத்தகட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு புதுமையான திட்டத்தை தொடங்க உள்ளார். அந்த திட்டத்தின் பெயர் "உங்க கனவை சொல்லுங்க". இந்த திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MKS) இந்த நாட்டிற்கு வழங்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகப் பார்க்க வேண்டும் என்றார்.
திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், உங்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட கனவுகள் இருக்கும். தங்களுக்காகவும், குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும், மாநிலத்திற்காகவும் மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள். உதாரணமாக, வெளிநாடுகளில் உள்ள சாலைகள் மிகச் சிறப்பாக இருப்பதை நாம் பேசுகிறோம். ஆனால், "எங்கள் ஊரில் அப்படி ஏன் இல்லை?" என்ற கேள்வி பலரிடமும் இருக்கும். அந்த வகையான எதிர்பார்ப்புகள், கனவுகள் அனைத்தையும் அரசுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக தன்னார்வலர்கள் "உங்க கனவை சொல்லுங்க" திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, வீடு வீடாகச் சென்று மக்களின் கனவுகளை கேட்டறிய 50 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார்படுத்தப்பட உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் படிவங்களை வழங்குவார்கள். அந்த படிவத்தில், ஒரு குடும்பம் தங்களின் மூன்று முக்கிய கனவுகளை பதிவு செய்யலாம். அத்துடன், இளம் தலைமுறையினரின் கனவுகளையும் தனிப்பட்ட முறையில் கேட்டறிந்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் அரசு செயல்பட உள்ளது. இதற்காக ஒரு பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த இணையதளம் ஜனவரி 11 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது... ஜனவரி 12ம் தேதி முதல் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்தும் அவர்களது கனவுகள், எதிர்பார்ப்புகள் தொடர்பான கருத்துகள் பெறப்படும். 2 நாட்களுக்கு பிறகு, சேகரிக்கப்பட்ட படிவங்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு, அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
2030ம் ஆண்டு தமிழகம் தமிழக அரசு ஏற்கனவே பல பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், மக்களிடையே இன்னும் பல எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பானதே. அந்த எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு, எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை முன்னேற்றும் வகையில் இந்த "உங்க கனவை சொல்லுங்க" திட்டம் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமையும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பாடியநல்லூரில் துவக்கம் இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து கருத்துகளையும் உடனடியாக நிறைவேற்றுவது அல்ல என்றாலும், 2030ஆம் ஆண்டில் தமிழகம் எப்படியொரு மாநிலமாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், நீண்டகால திட்டமிடலுக்காக இந்த கருத்துகள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் விளக்கினார். அந்தவகையில் "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தினை இன்று திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் இன்றைய தினமே தொடங்கி வைக்கப்படும்.