காலிங்கராயன் மன்னரின் வெண்கல சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்

காலிங்கராயன் மன்னரின் வெண்கல சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு அருகே காலிங்கராயன் அணையை கட்டிய காலிங்கராய மன்னரின் நினைவை போற்றும் வகையில் அவரின் சிலையை காணொளி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி ஆறும் பவானி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 743- ஆண்டுகளுக்கு முன்பாக காலிங்கராயன் மன்னர் தடுப்பணை கட்டினர். பவானி காலிங்கராயன் பாளையம் முதல் தொடங்கி கொடுமுடி ஆவுடையார் பாறை வரை 90 கிலோ மீட்டர் தூரம் சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது. நீர் மேலாண்மை மற்றும் நிலத்தடி நீர் உயரும் வகையில் வெட்டப்பட்ட இந்த காலிங்கராயன் கால்வாய் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15- ஆயிரம் ஏக்கர் வரை நிலங்கள் பாசனம் பெற்று மஞ்சள், நெல், வாழை, கரும்பு பயிரிடப்படு வருகிறது.

இந்த நிலையில் காலிங்கராயன் மன்னர் நினைவை போற்றும் தை மாதம் 5- ஆம் தேதி காலிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டு வெள்ளோடு பகுதியில் இருந்த காலிங்கராயன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்பட காலிங்கராயன் மன்னர் சிலை மீண்டு வெள்ளோடு பகுதியில் 35- லட்சம் மதிப்பீட்டில் 7- அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை மற்றும் காலிங்கராயன் நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, "நதிகளை இணைக்கும் வகையில் காலிங்கராய மன்னர் இரண்டு அணைகளை கட்டி உள்ளார். இதுபோன்று யாரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நீர் வளத்தை அமைத்த காலிங்கராயன் மன்னருக்கு அவரது குலதெய்வமான ராசா கோயில் அருகே 7அடி உயரமுள்ள முழு திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

காலிங்கராயன் வரலாறு குறித்து பாட புத்தகத்தில் இடம் பெறுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "காலிங்கராயன் குறித்து புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, பாட புத்தகத்தில் காலிங்கராயன் வரலாறு இடம்பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "காலிங்கராயன் புனரமைப்பு பணிக்கு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து 45 நாட்கள் காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் செய்யும் போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், காளிங்கராயன் வாய்க்கால் ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பேபி வாய்க்காலில் சில இடங்களில் கழிவுநீர் கலப்பது குறித்து தவறுகள் இருக்கலாம். பெரும்பாலும் பேபி வாய்க்கால் கழிவுநீர் கலக்காமல் தடுக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுபடி காலிங்கராயன் வாய்க்கால் பாதுகாக்கப்படுகிறது" என்றார்.