20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் - முதல்வர் ஸ்டாலின் பதிவு

20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் - முதல்வர் ஸ்டாலின் பதிவு

 “தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்” என தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை சுட்டிகாட்டி முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 ஆண்டு காலக் கோரிக்கையை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளது.

நம்பி வாக்களித்த மக்களுக்கு, திமுக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம். அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்.

திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும். தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

TAPS: புதிய ஓய்வூதிய திட்ட பலன்கள் என்னென்ன?

பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களையும் வழங்கக் கூடிய புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) செயல்படுத்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் பலன்கள்:

1) மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50%-க்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10% பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

2) 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

3) ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

4) அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும்போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

5) புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

6) பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.