சிவாஜி கணேசனை விட பிரதமர் மோடி மிக சிறந்த நடிகர் - ப.சிதம்பரம் விமர்சனம்
சிவாஜி கணேசனை விட மிக சிறந்த நடிகர் பிரதமர் மோடி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், ஆலங்குடி மற்றும் திருமயம் தொகுதிகளின் காங்கிரஸ் வட்டார தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களுடன் எஸ்.ஐ.ஆர். மற்றும் 2026 சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர், "மகாத்மா காந்தியடிகளை இரண்டாவது முறையாக பாஜக அரசு கொலை செய்துள்ளது. புதிய சட்டத்தின்படி ஆண்டுக்கு 65 நாட்கள் கூட 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் வழங்க முடியாது.
மத்திய அரசு தற்போது கொண்டு புதிய வேலைத்திட்டத்தால் மாநில அரசுகளின் நிதி சுமை அதிகரிக்கும். இந்த புதிய சட்டத்தால் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமே கிடையாது. பல மாநிலங்களுக்கு வேலையே கிடைக்காது.
நாங்கள் அறிவித்த திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 90%. மாநில அரசுகளின் பங்கு 10%. ஆனால், தற்போது புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாநில அரசுகளின் பொறுப்பு 60% என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களுக்கு நிதிச் சுமை ஏற்படும். ஏற்கனவே பல மாநிலங்கள் நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கின்றன. தேர்தலில் இது மிகப் பெரிய பிரச்னையாக பாஜகவிற்கு இருக்கும்" என்றார்.
மேலும், விஜய் வருகை திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ப. சிதம்பரம், "அது குறித்து எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். எங்களுடைய தலைமை திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது" என்றார்.
"ஒரு பக்கம் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மற்றொரு பக்கம் 11 ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அந்த காலத்தில் சிவாஜி கணேசன் நடித்து நடிகர் திலகம் என்று பெயர் எடுத்தார். ஆனால், அவரை விட சிறந்த நடிகர் நமது பிரதமர் நரேந்திர மோடி" என்று ப.சிதம்பரம் விமர்சித்தார்.
முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவு நாளை ஒட்டி, காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ப.சிதம்பரம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.