இந்தியா வருகிறார் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியா வர உள்ளார். அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இது குறித்து அனிதா ஆனந்த் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் நமக்கு வலுவான, நிலையான கூட்டாளிகள் தேவை. நான் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்த பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
இந்தோ-பசிபிக் நாடுகளுக்கும் அவற்றின் பொருளாதாரங்களுக்கு நம்பகமான கூட்டாளியாக கனடாவை மாற்றுவதற்காக நான் பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அனிதா ஆனந்தின் சுற்றுப்பயணம் அக்டோபர் 12ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை இருக்கும் என கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
அவர் மும்பைக்குச் சென்று, இரு நாடுகளிலும் முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த கனடா மற்றும் இந்திய நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்தியப் பயணத்திற்குப் பிறகு அவர் சிங்கப்பூர் மற்றும் சீனாவுக்குச் செல்வார்.
இவர் தான் கனடா பிரதமர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று முதலில் தகவல் பரவியது. ஆனால் இவர் பிரதமர் போட்டியில் இல்லை என்பதை அனிதா ஆனந்த் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.