தமிழ் சினிமாவில் உருவக் கேலி... விதைத்தவர்களை வீழ்த்திய சோகம்

தமிழ் சினிமாவில் உருவக் கேலி... விதைத்தவர்களை வீழ்த்திய சோகம்

தமிழ் சினிமாவில் உருவக் கேலி என்பது இன்று நேற்று வந்ததல்ல. ஒருவரின் உருவத்தை வைத்து கிண்டல் செய்து, அதன் மூலம் அடுத்தவர்களை மகிழ்விப்பது தான் காமெடி என, சமூக ஊடகங்கள் உச்சத்தில் இருக்கும் இந்த காலத்திலும் நம்பவைக்கப்பட்டு வருகிறது என்றால், நாம் நாகரிக சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்வதற்கே வெட்கி தலைகுனிய வேண்டும். ஆனால், இன்றும் நடிகையிடம் அவரின் உடல் அமைப்பையும், உருவ அமைப்பை தவிர கேட்க வேறு என்ன இருக்கிறது என்று ஒருவர் கேட்கிறார் என்றால், அதை நினைத்து வேதனைப்படுவதை தவிர வேறுவழியில்லை.

நடந்தது என்ன?

கடந்த அக்.30 ஆம் தேதி 'அதர்ஸ்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன், இயக்குநர், நடிகை கௌரி கிஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கதாநாயகனிடம், " படத்தில் நடிகையை தூக்கினீர்களே, அவரின் எடை என்ன? என்று ஒரு யூடியூபர் கேள்வி எழுப்பினார்.

அடுத்த நாள் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் நடிகை கௌரி கிஷன் கேள்வி எழுப்பியபோது, "இது போன்ற முட்டாள்தனமான கேள்விகள் எழுப்பப்படுகிறது. அனுபவம் வாய்ந்தவர்கள் இது போன்ற கேள்விகளை எழுப்பக்கூடாது" என்று கூறி கதாநாயகி பிரச்சனையை முடித்தார்.

ஆனால், கடந்த 6ஆம் தேதி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதே யூடியூப்பர்கள், "எங்களை பற்றி தொலைக்காட்சியில் தவறாக எப்படி பேசலாம்? ஒரு நடிகையிடம் எடையை பற்றி கேட்க கூடாதா? நடிகையிடம் வேறு என்ன கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று ஒட்டுமொத்த நடிகைகளையும் அவமானப்படுத்தும் விதமாக அவர்கள் மீண்டும் கேள்வி எழுப்ப, கொதித்தெழுந்த கௌரி கிஷன், "உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலி செய்வதற்கு சமம். இது மாதிரியான கேள்விகளை எழுப்பி, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்" என்று கூறினார்.

நடிகையிடம் எழுப்ப்பட்ட கேள்விக்கு, பெண்ணிய ஆர்வலர்கள் தொடங்கி, நடிகர் சங்கம் வரை கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், இன்று தான் பேசியது தவறு என்று மன்னிப்பு கோரியுள்ளார் அந்த யூடியூப்பர்.

நடிகையிடம் அவதூறாக கேள்வி எழுப்பிய அந்த யூடிப்பரை தமிழ் சினிமா பிரபலங்கள், பெண்ணிய போராளிகள், இன்னும் இதர அமைப்பினர் என கடந்த 48 எட்டு மணி நேரமாக பலரும் கேள்வி கணைகளால் துளைத்தெடுத்து இன்று மன்னிப்பு கேட்கும் அளவுக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். அவர் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டாலும், 'ஒரு நடிகையிடம் வேறு என்ன கேள்வி கேட்பது' போன்ற ஆணாதிக்கத்தின் உச்சபட்ச வெளிப்பாடான அந்த வார்த்தையை மட்டும் எந்த பெண்ணாலும் மன்னிக்க இயலாது. தான் மனைவி, மகளோடு வாழ்ந்து வருகிறோம் என்ற நினைப்பு சிறிதேனும் இருக்கும் யாருக்கும், இந்த மாதிரியான வார்த்தைகள் மறந்தும் வாயிலிருந்து வராது.

நடிகையிடம் உருவக் கேலியை எப்படி செய்யலாம்? மன்னிப்பு கேளுங்கள் என்று கூறிய பாதி பேர் இதற்கு முன்பு தாங்கள் நடித்த படத்தில் உருவக் கேலி செய்வது போன்ற காட்சியை அனுமதித்தோ அல்லது தாங்களே நடிகையிடம் உருவக் கேலியை செய்தவர்களாகவோ தான் இருக்கிறார்கள் என்பது அவ்வளவு பெரிய துர்ப்பாக்கியம். யாரை பார்த்து கருப்புன்னு சொன்ன? தமிழ்நாடு கொதிக்கும் என்று கதாநாயகனுக்காக கொதிக்கும் தமிழ் சினிமா, கதாநாயகிகளை கிண்டல் செய்யும் உருவக்கேலி காட்சிகளை தவறாமல் வைப்பது ஏன்? என்ற கேள்வி எழாமல் இல்லை.

தமிழ் சினிமாவின் வரலாறு 100 ஆண்டுகளைக் கடந்தது என்றால், அதில் பல தசாப்தங்கள் நடிகைகளின் உருவத்தை வைத்தோ, உடலை வைத்தோ காமெடி என்ற பெயரில் அவர்கள் அங்கலாய்க்கப்படுவதுதான் வேதனையின் உச்சம். போஸ்ட் கார்டில் ஆரம்பித்த நாம் இன்றைக்கு இன்ஸ்டாகிராம் காலத்திற்கு முன்னேறினாலும், ஒருவரின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்ய முற்படுவோமாயின், நம்மைவிட கற்கால மனிதன் ஆகச்சிறந்த நாகரிகத்திற்கு சொந்தக்காரன்தான்.

ஒரு பெண் தனக்கு பிடித்த ஆடைகளை அவளின் வசதிக்கு ஏற்ப அணிகிறாள், அதை கிண்டல் செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என்ற கருத்துக்களை பொட்டில் அடித்து போன்று திரையில் காட்டும் இயக்குநர்கள் இருக்கும் இதே தமிழ் சினிமாவில் தான், நடிகைகளின் உடலை கிண்டலடிக்கும் காட்சிகளும் வைக்கப்படுகிறது என்பதுதான் தமிழ் சினிமாவின் கரும்புள்ளியாக நீண்ட காலமாக தொடர்கிறது.

தமிழ் சினிமாவில் பெண்களிடம் தொடர்ந்த இந்த உருவக் கேலிகள், தற்போது ஆண்களையும் விட்டுவைக்கவில்லை. பன்னிவாயன், காட்டெருமை, சைடு ஸ்டாண்ட் என குறிப்பிட்ட நடிகரை, கதாநாயகனோ அல்லது வேறு ஒரு கேரக்டரோ விமர்சிக்கும் போது தியேட்டரில் வேண்டுமானால் விசில் பறக்கும். ஆனால், எழுந்து நடக்க முடியாமல், இன்னொருவரின் துணையோடு இருக்கும் ஊனமுற்றவர்களை அது எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் சிந்திப்பதில்லை.

வணிக நோக்கத்திற்காக குறைந்தபட்ச அறனின்றி இத்தகைய காட்சிகளை சினிமாவில் வைக்கும் துணிச்சல் இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் இருக்கும்போது, 'நடிகையிடம் வேறு என்ன கேள்வி கேட்பது' போன்ற அபத்தமான வார்த்தைகளை பேச ஒரு யூடியூப்பர் உச்ச நீதிமன்றத்திடம் ஆணை பெற்றுவிட்டா வருவார்?

நடிகையிடம் இந்த மாதிரியான அநாகரிக கேள்வி எழுப்பப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, தமிழ் சினிமாவில் நடிகைகள் காமெடி என்ற பெயரில் அங்கலாய்க்கப்படும் விதம்தான். இது சராசரி மனிதனின் மனதில் விஷத்தை விதைத்து, இன்று ஆலமரமாக சிலரின் மனங்களில் வேரூன்றி நிற்கிறது. ஒரு நாகரிக சமூகம் இதற்கு மேலும் உருவக் கேலியை முன்னெடுத்து செல்லுமாயின், அது சமூகத்தில் ஊடுருவி தனிமனிதர்களின் தன்னம்பிக்கையை சிதைத்துவிடும் என்பதே நிஜம்