‘சிறு வயது கனவு நிறைவேறிவிட்டது’ - ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்தது குறித்து ராம் சரண் நெகிழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது குழந்தை பருவ கனவு நிறைவேறியதாக நடிகர் ராம் சரண் தெரிவித்தார்.
‘தி வொண்டர்மென்ட் டூர்’ என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அந்த வகையில், நேற்று (நவ.8) ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது. இரவு 7 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கிய இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் ராமோஜி திரைப்பட நகரம் இசை சொர்க்கமாக மாறியது.
நிகழ்ச்சிக்கு இடையே நடிகர் ராம் சரண் மேடைக்கு வந்தபோது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ய தொடங்கினர். அதனைத் தொடர்ந்து மேடையில் இருவரும் இணைந்து பாடியபோது ரஹ்மான், ராம் சரண் காம்போ ரசிகர்களை மெய்மறக்க செய்தது என்றே கூறலாம். தொடர்ந்து பேசிய ராம் சரண், ''ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பணியாற்றுவது என்பது எனது சிறு வயது கனவு. தற்போது எனது கனவு நனவாகிவிட்டது. பெத்தி போன்ற படத்தில் நடிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று கூறி ரசிகர்களின் பலத்த கைத்தட்டல்களை பெற்றுக் கொண்டார்.