வாக்குத் திருடன் என காங்கிரஸார் கோஷம்... சோனியா மன்னிப்பு கோர பாஜக வலியுறுத்தல்

வாக்குத் திருடன் என காங்கிரஸார் கோஷம்... சோனியா மன்னிப்பு கோர பாஜக வலியுறுத்தல்

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் வாக்குத் திருடன் என கோஷமிட்டதை சுட்டிக்காட்டி, இதற்காக நாட்டு மக்களிடம் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி நட்டா பேசியதாவது:

டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

பிரதமர் மோடிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் கடும் கண்டனத்திற்குரியது. இந்த சம்பவம், காங்கிரஸின் மனநிலையையும், அக்கட்சி என்ன நினைப்பில் உள்ளது என்பதையும் காட்டுகிறது. இதற்காக நாட்டு மக்களிடம் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு ஜே.பி. நட்டா கூறினார்.

காங்கிரஸ் மறுப்பு: ஆனால், பிரதமருக்கு எதிராக யாரும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சி எம்பி கேசி வேணுகோபால், “டெல்லியில் காங்கிரஸ் கட்சியால் வெற்றிகரமாக பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதனால் பாஜக, அடிப்படை ஆதாரமில்லாத நாடகத்தில் ஈடுபட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக எந்த விமர்சனமும் பேரணியில் முன்வைக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

என்ன நடந்தது?: டெல்லியில் பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பேரணியில், பிரதமர் மோடிக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பினர். அப்போது, வாக்கு திருடன் என சிலர் முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.