ஆப்கன் இந்தியாவை நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது: அமிர் கான் முட்டாகி

ஆப்கானிஸ்தான் இந்தியாவை நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது என்றும், தங்கள் நாட்டில் இருந்து கொண்டு எந்த ஒரு குழுவும் எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் செயல்பட தங்கள் அரசு அனுமதிக்காது என்றும் இந்தியா வந்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.
2021ல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மூடியது. அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து, வர்த்தகம், மருத்துவ உதவி, மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதற்காக இந்தியா தொழில்நுட்ப அலுவலகத்தைத் திறந்தது.
இந்நிலையில், தலிபான் அரசு சார்பில் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதி ஒருவர் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். நேற்று புதுடெல்லி வந்த ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, இன்று தனது குழுவினருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "சமீபத்தில் ஆப்கனிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது முதலாவதாக வந்து உதவியது இந்தியாதான். ஆப்கனிஸ்தான் இந்தியாவை நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது. பரஸ்பர மரியாதை, வர்த்தகம், மக்களுக்கு இடையேயான தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் உறவுகளை நாங்கள் விரும்புகிறோம். இந்தியா - ஆப்கனிஸ்தான் இடையேயான உறவை வலுப்படுத்த ஒரு ஆலோசனை செயல்முறையை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
டெல்லியில் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இந்தப் பயணம், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான புரிதலை அதிகரிக்கும். இந்தியாவும் ஆப்கனிஸ்தானும் தங்கள் ஈடுபாட்டையும் பரிமாற்றங்களையும் அதிகரிக்க வேண்டும். எந்த ஒரு குழுவும் எங்கள் பிரதேசத்தை மற்ற நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.