SIR | தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் நீக்கப்பட வாய்ப்பு?

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

SIR | தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் நீக்கப்பட வாய்ப்பு?

பிகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றன.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், வரும் வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முன்பு 10 லட்சத்து 21 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக புதுச்சேரியில் 85 ஆயிரம் வாக்காளர்களும், காரைக்காலில் 17 ஆயிரம் பேரும் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பெயர் தவறாக நீக்கப்பட்டிருந்தால் ஜனவரி 15 வரை உரிமை கோரலாம் என புதுச்சேரிக்கான தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் மாத கணக்கெடுப்பு படி மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 97 லட்சம் பேரை நீக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், சென்னையில் மட்டும் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 15 லட்சம் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதி வாய்ந்த வாக்காளர்கள், படிவம் 6 உடன் உறுதிமொழி படிவத்தை இணைத்து பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.