பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 31 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரில் நேற்று (செப். 30) ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரியச் சின்னமான தேவாலயம் உட்படப் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்தத் துயரச் சம்பவத்தில் இதுவரை 31 பேர் உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட நில அதிர்வை உணர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பீதியடைந்து வீடுகளில் இருந்து வீதிகளுக்கு ஓடினர். நிலநடுக்கத்தின் காரணமாக மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த நிலநடுக்கத்தில் அங்குள்ள சில கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், மொத்தம் 31 பேர் உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லாத நிலையில், தீயணைப்புத் துறையினரும், உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்க பீதியில் உறைந்துள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில், நகரத்தின் அடையாளமாக விளங்கிய, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரியச் சின்னமான செயிண்ட் பீட்டர் அப்போஸ்தலர் தேவாலயம் (Parish of Saint Peter the Apostle) பகுதியளவில் இடிந்து விழுந்தது. சிலுவேட்டுடன் தேவாலயத்தின் முகப்புப் பகுதி இடிந்து விழும் காணொளி, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.