இறைச்சி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... கோழிக்கறி விலை விரைவில் குறைகிறது

இறைச்சி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... கோழிக்கறி விலை விரைவில் குறைகிறது

பண்ணை விவசாயிகள் போராட்டத்தால் கறிக்கோழி விலை உயரவில்லை என்று பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கோவையில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு  நடைபெற்றது. அதில் பேசிய கூட்டமைப்பின் நிர்வாகிகள், "விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, இந்த பிரச்சினையை தேவையற்ற விதத்தில் பெரிதாக்கி வருகின்றனர். உண்மையிலேயே, 90 சதவீத கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கிலோவுக்கு ரூ.7.50 முதல் ரூ.12 வரை பெறுகின்றனர். கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே வழங்கப்படுகிறது என்ற தகவல் முற்றிலும் தவறானது. வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே குறைநத் அளவிற்கு பெறுகின்றனர்" என்றனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், "நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் கறிக்கோழி வளர்ப்பாளர்களுக்கு அதிக கூலி வழங்கப்படுகிறது. கறிக்கோழி பண்ணையாளர்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. நாள்தோறும் 23 லட்சம் முதல் 25 லட்சம் வரை கறிக்கோழிகள் வழக்கம் போல் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.

முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்ட ஆலோசனைப்படி அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இது அரசு கொள்முதல் செய்யும் தொழில் அல்ல. ஒப்பந்த நிறுவனங்களுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையிலான வர்த்தகமாகவே இது நடைபெறுகிறது.

தற்போது கோழிக் குஞ்சுகளின் விலை ரூ.60-ஐ எட்டிய நிலையில், புதிதாக பலர் இந்தத் தொழிலுக்கு வருகின்றனர். எந்த விவசாயியையும் வற்புறுத்தியோ அல்லது மிரட்டியோ இந்தத் தொழிலை செய்ய யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

டிசம்பர் மாதமே வளர்ப்பு தொகையை ரூ.1 உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. கோடை காலத்தில் கூடுதலாக கிலோவுக்கு ரூ.1 வழங்கவும், விற்பனை விலை உயரும் போதும் அதே போல் கிலோவுக்கு ரூ.1 அதிகரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 3 லட்சம் கோழிக் குஞ்சுகள் இறந்ததாக தகவல் உள்ளது. கோழிக் குஞ்சுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போதைய கறிக்கோழி விலை உயர்வு இந்த போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல. இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும்.

சந்தை விலைகளில் முழுமையான கட்டுப்பாடு விதிக்க இயலாது. தமிழ்நாடு அதிக நுகர்வோர்களைக் கொண்ட மாநிலமாகவும் உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. தற்போதைய விலை உயர்வு படிப்படியாக குறையும்” என்றனர்.