வடமாநில இளைஞர் குடும்பத்துடன் படுகொலை; பகீர் கிளப்பும் பின்னணி

வடமாநில இளைஞர் குடும்பத்துடன் படுகொலை; பகீர் கிளப்பும் பின்னணி

சென்னையில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தின் பகீர் பின்னணி தெரிய வந்துள்ளது.

சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் நிழல் சாலை சந்திப்பில் கடந்த திங்கட்கிழமை சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் மூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அடையாறு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அடையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தில் இருந்த மூட்டையை திறந்து பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு அந்த மூட்டையில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அடையாறு போலீசார் கொலை செய்யப்பட்ட மர்ம நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து அடையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குறிப்பாக மூட்டை வைக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடையார் போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கவுரவ குமார் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் தங்கி இருந்து செக்யூரிட்டி வேலை தேடி வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் கௌரவ குமாரின் மனைவியின் அலைபேசிக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது அந்த அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாகவும், அதன் பின்னர் மனைவி மற்றும் பெண் குழந்தை எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் இருந்தது.

பெருங்குடி குப்பைக் கிடங்கு
பெருங்குடி குப்பைக் கிடங்கு 

தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த அடையார் போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து சந்தேகத்திற்கிடமான சிலரையும், சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்கள் என்று மொத்தம் ஏழு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக 7 நபர்களும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையில் திடுதிக்கும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் கவுரவ் குமார் மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தை என மூவரையும் கொலை செய்து விட்டதாக சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

அதுமட்டும் இல்லாமல் கவுரவ் குமார்மனைவியின் உடலை பெருங்குடியில் இருக்கக்கூடிய குப்பை கிடங்கில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாகவும், குழந்தையின் உடலை மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் வீசப்பட்டதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிலையில் போலீசார் அப்பகுதிகளில் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில் கவுரவ் குமார் மனைவி புனிதா குமாரியை மேற்குறிப்பிட்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கவுரவ் குமார் மற்றும் கும்பல் இடையே சண்டை ஏற்படவே அந்த கும்பல் கவுரவ் குமார், அவரது மனைவி புனிதா குமாரி மற்றும் குழந்தை என மூவரையும் கொலை செய்திருப்பதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் பீகாரை சேர்ந்த சிக்கந்தர் (33), நரேந்திர குமார் (45), ரவீந்திரநாத் தாகூர் (45), பிகாஸ் (24) உட்பட 5 பேரை அடையாறு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சிக்கந்தர் என்பவர் தரமனியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளி வேலை இருப்பதாக கவுரவ் குமார் மற்றும் அவரது மனைவி குழந்தையை அழைத்து வந்துள்ளார். மேலும் அந்த பகுதியில் கட்டட வேலைகளும் நடைபெற்று வருவதால் பல வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்துள்ளனர். அவர்களுடன் சுமார் ஒன்றரை மாதம் தங்கி இருந்து இவர்கள் அங்கு பணிபுரிந்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் அங்கு தங்கிருந்த போது தான் இந்த கும்பல் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய மூயன்று இருப்பதும், அதை தடுக்கச் சென்ற கவுரவ் குமாரை கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கொலை செய்திருப்பதும், பிறகு அவரது மனைவி மற்றும் குழந்தையை அடித்துக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

பெருங்குடி குப்பைக் கிடங்கு
பெருங்குடி குப்பைக் கிடங்கு 

இதற்கிடையே கொலையான 2 வயது ஆண் குழந்தை சடலம் இன்று மாலை மத்திய கைலாஷ் பகுதி கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பெண்ணின் உடலை பெருங்குடி குப்பைக் கிடங்கில் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கவுரவ் குமார் மனைவியின் சடலம் கிடைத்த பிறகு கொலைக்கான முழு விவரங்கள் வெளியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் 9 பேர் இருப்பதாகவும், முழுமையான விசாரணைக்கு பிறகு கொலை சம்பவத்தில் வேறு யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள்? என்பது தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்கு காவல் துறை உயர் அதிகாரிகள் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த தங்கி பணிபுரியும் அனைத்து வடமாநில நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுவரை கைது செய்யப்பட நபர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று எப்படி இந்த சம்பவம் நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.

மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தட்டிக் கேட்ட கணவன், மனைவி மற்றும் குழந்தை என ஒரு குடும்பமே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.