1,036 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது ஏன்? - தமிழக பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

1,036 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது ஏன்? - தமிழக பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

அரசுப் பள்ளிகளில் 1,036 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் 1,036 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நீதிமன்ற வழக்குகளின் காரணமாக நிரப்ப இயலாத நிலை உள்ளது.

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஊட்டுப் பதவியாக பட்டதாரி ஆசிரியர் பதவி மட்டும் உள்ளது. இதனால் இந்த பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை சேர்க்கக் கூ டாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016ம் ஆண்டுக்கு பின்னர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசியராக பதவி உயர்வில் சென்ற 1,187 முதுநிலை ஆசிரியர்களை மீண்டும் தரம் இறக்காமல் பணியில் தொடரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப் 4-ம் தேதி வரவுள்ளது. மேலும், ஆசிரியர் பணிக்கும், பதவி உயர்வுக்கும் டெட் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.

தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமென ஏற்கெனவே பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.