“மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது”
உஜ்ஜைனில் இரண்டரை அடி உயரம் உள்ள மாற்றுத்திறனாளி ஒருவர் நான்கு வருடங்களுக்கு முன் தன்னை விட 10 வயது இளைய பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டது தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் வசிப்பவர் ரோகித் நக்மோடியா. 35 வயதாகும் இவரின் மொத்த உயரம் 2.5 அடி தான். பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான இவருக்கு, கால்களும் செயலிழந்து சக்கர நாற்காலி உதவியுடன் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
ஆனால் மனதளவில் இப்போதும் மகிழ்ச்சியுடனும், வலிமையுடனும் ரோகித் காணப்படுகிறார். நான்கு வருடங்களுக்கு முன், தன் வாழ்க்கைத் துணையாக தன்னை விட 10 வயது இளைய பெண்ணை தேர்ந்தெடுத்தார்.
‘சாதி, மதம், இனம், நிறம், உருவம்’ என அனைத்தையும் கடந்தது தான் காதல் என்ற கூற்றுக்கு இணங்க, இந்த இணையர்களும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடங்கினர். ‘மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித காதலல்ல; அதையும் தாண்டி புனிதமானது’ என்ற திரைப்பட பாடலுக்கு இணங்க, டீனா நக்மோடியா (25), தன் காதல் கணவன் ரோகித்திற்காக வீட்டை விட்டு வெளியேறி அவரை கரம்பிடித்தார்.
ரோகித்-டீனா திருமணம்
சமூகத்தின் நிழலில், இந்த அற்புதமான தம்பதியினர் பல கிண்டல் கேலிகளுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், ‘காதலுக்கான புதிய இலக்கணத்தை’ இவர்கள் படைத்துள்ளனர். உண்மை காதலுக்கான அடித்தளத்தையே மாற்றி எழுதியுள்ளனர். டீனா தனது கணவருக்கு சேவை செய்வதன் மூலமும், வீட்டின் தேவைகளைப் பார்த்துகொள்வதன் மூலமும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக நம்மிடம் கூறினார்.